* இடதுசாரி முன்னணி'
யுத்த முனையில் படையினரடையும் பின்னடைவை மூடி மறைக்கவே கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்களைக் கைதுசெய்து பழிவாங்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளதாக இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது.
தமிழர்கள் கைதுசெய்யப்படுவது தொடர்பாக இடதுசாரி முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
அண்மைக் காலமாக கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழ் மக்கள் வகை தொகையின்றி கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக உயர் நீதிமன்றம் விடுத்திருந்த கண்டனத்தைக் கூட பாதுகாப்புப் பிரிவினர் உதாசீனம் செய்வதுபோல் அவர்களது நடவடிக்கைகள் அமைகின்றன.
மேலும் யுத்த முனையில் படையினர் அடையும் பின்னடைவை மூடி மறைக்கவே இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழ் மக்கள் மீது புரிகின்றனர். நாட்டில் விலைவாசி உயர்வாலும் இயற்கை அனர்த்தங்களாலும் மக்கள் தாங்கமுடியாத துயரத்தில் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.
தென்னிலங்கையில் இந்நிலையால் மக்கள் கொதிப்படைந்து அரசுக்கு எதிராகக் கிளர்வதை தடுப்பதற்காகவே அரசாங்கம் இத்தகைய முயற்சியில் ஈடுபடுகின்றது.
சர்வதேச ரீதியிலும் இந்நாட்டின் உழைக்கும் மக்களாலும் ஓரங்கட்டப்பட்டு இருக்கும் இவ் அரசுக்கு எதிராக அனைத்துச் சக்திகளும் ஓரணியில் நின்று போராடுவதற்கு முன்வரவேண்டும்.
இனி வரும் காலம் போராட்டங்கள் நிறைந்த காலங்களாகும். பலமான மக்கள் போராட்டத்தின் மூலமே இன்றைய ஆட்சியை வெளியேற்ற முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.