40 இலட்சம் ரூபா செலவில் மனநோயாளருக்குரிய சிகிச்சை பிரிவு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளையினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டை வதிவிடமாகக் கொண்டுள்ள தமிழ் வைத்தியர்களுடைய நிதி உதவியைக் கொண்டு இந்தக் கட்டிடம் வவுனியா பொதுவைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்க வவுனியா கிளைத் தலைவர் டாக்டர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா செஞ்சிலுவைச் சங்க காரியாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆயுட்கால உறுப்பினர்களுக்குரிய விசேட கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 12 மனநோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறக்கூடிய வகையில் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிட நிர்மாணப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. ஆனாலும், முற்றுபெறுவதற்கு இன்னும் 12 இலட்சம் ரூபா தேவைப்படுகின்றது.
மனநோயாளர்களுக்குரிய ஆலோசனைகளை வழங்கும் திட்டமும் இதில் அடங்கியுள்ளது. அடுத்த கட்டமாக நாம் வவுனியாவில் எமது மருந்தகம் ஒன்றினை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் எமது கிளைக்கு வருமானம் கிடைக்கும் என நாம் நம்புகின்றோம்.
நாம் தொடர்ந்தும் வேறு நிறுவனங்களுடைய உதவியினை எதிர்பார்த்திருக்க முடியாது. எமது கிளைக்கு ஏதாவது ஒருவகையில் வருமானம் வரக்கூடிய திட்டங்களை அமுலாக்கப்பட வேண்டும். பல திட்டங்கள் உள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், கனடிய செஞ்சிலுவைச் சங்கம், யுனிசெவ், யூ.என்.எச்.சி.ஆர். போன்ற நிறுவனங்கள் எமக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கிவருகின்றது என்றார்.