தென்மராட்சி பகுதியில் விவசாயம் செய்ய தடை செய்ப்பட்ட இடங்களில் மீண்டும் காலபோக செய்கையை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
மறவன்புலவு, கோகிலாகண்டி, நாவற்குழி, நுணாவில் கிழக்கு ஆகிய பகுதிகளிலேயே இம்முறை காலபோக செய்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்மராட்சி பகுதியில் 2000 ஆம் ஆண்டு இடம் பெற்ற மோதல் சம்பவங்களையடுத்து மறவன்புல, கோகிலா கண்டி, நாவற்குழி நுணாவில் கிழக்கு பிரதேசங்களில் 185 ஹெக்ரெயர் வயல்களில் பாதுகாப்பு காரணங்களால் விவசாயம் செய்ய படையினர் தடைவிதித்திருந்தனர்.
தற்போதுள்ள அரிசி விலை அதிகரிப்பு குடா நாட்டின் உணவுத் தேவை என்பவற்றால் மீண்டும் இப்பகுதிகளில் வயல்களிள் நெற் செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதிக்குமாறு விவசாயிகள் பலாலி பாதுகாப்பு தலைமையகத்துக்கு விடுத்திருந்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து இப்பிரதேசங்களில் உள்ள வயல் காணிகளின் உரிமையாளர்கள் தமது காணி ஆவணங்களுடன் நெற் செய்கைமேற்கொள்வதற்கான பதிவுகளை கைதடி கமநல சேவை நிலையத்தில் உடனடியாக பதிவு செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் விவசாய சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த வயல்களில் நெற்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு விதை நெல், உரம் என்பவற்றை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குடாநாட்டில் இம்முறை கால போகச் செய்கையில் அதிகளவுக்கு விவசாயிகள் ஈடுபடவுள்ளதாகவும் விவசாயப் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.