மேல் மாகாண சபை அமைச்சர்கள் இருவரை அடுத்த வாரம் கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விரு அமைச்சர்களையும் கைது செய்து நீதிமன்றில் நிறுத்துமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், எம்.ஜி.டபிள்யூ.எம்.முத்துபண்டா இரு அமைச்சர்களினதும் கைது தொடர்பாக தகவல் தருகையில்,
அமைச்சர்களான ஹெக்டர் பெத்மேஜ் மற்றும் ஏ.டி.காமினி திலகசிறி ஆகிய இருவரும் நாட்டுக்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட கடத்தல் மற்றும் அவிசாவளை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் கொலைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி சட்ட மா அதிபர் விடுத்த அறிவுறுத்தலுக்கிணங்க, பிரதி சொலிசிற்றர் ஜெனரல் விஜித் மாலகொட இவ்விருவரையும் கைது செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார்.
கடந்த வருடம் ஜனவரி 13 ஆம் திகதியன்று அமைச்சர் ஜோன் செனவிரட்ண தலைமையில் இடம்பெற்ற ஷ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கான குழுவின் கூட்டத்தில் இவ்விருவரும் தண்டனைக்குரிய குற்றவாளிகளாக இனங்காணப்பட்டிருந்தனர்.
இவர்கள் இருவரும் குற்றவாளிகளென அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒழுங்காற்றுக்குழு கட்சியின் செயற்குழுவிலிருந்து அமைச்சர் பெத்மேஜை இடைநிறுத்தியிருந்ததுடன், மூன்று மாத காலத்துக்கு அவர் கட்சியிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டார். அத்துடன், அமைச்சர் திலக் சிறியும் ஆறு மாத காலத்துக்கு கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.
தண்டனைக்குரியவர்களாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இவ்விரு அமைச்சர்களும் ஒழுக்காற்று நடவடிக்கைக்கான குழுவில் ஜோன் செனவிரட்ண, பேராசிரியர் விஸ்வ வர்ணபால, ஞான பண்டார தென்னக்கோன், பேராசிரியர் ஏவி.சுரவீர, கலாநிதி ஜகத் பாலசூரிய, டபிள்யூ.கருணாஜீவ, சாலிய மாத்தேவ், ஜெரி ஜெயவர்த்தன, சம்பனி பத்மசேகர மற்றும் மறைந்த அனில் ஒபயசேகர ஆகியோர் அங்கம் வகித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.