* ஐ.தே.க. எழுப்புகிறது
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளில் ஆயிரக் கணக்கானவை உரிய காலத்துக்குள் விநியோகிக்கப்படவில்லையென ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள 9 இலட்சத்து 82 ஆயிரத்து 721 வாக்காளர்களில் ஒரு இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் (சுமார் 20 வீதம்) வழங்கப்படவில்லை.
வாக்காளர் அட்டைகள் வழங்குவதற்கான உத்தியோகபூர்வ காலப் பகுதிக்குள் அதாவது கடந்த 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன் தபால் திணைக்களத்தால் விநியோகிக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
தேர்தலில் தவறான முறையில் பயன்படுத்துவதற்கான ஒரு தந்திரோபாயமாகவே இவை விநியோகிக்கப்படவில்லை எனவும் அக்கட்சி தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக தபால் மா அதிபர் கே.பி. திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்;
இந்த வாக்காளர் அட்டைகளுக்கு உரியவர்கள் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்தும் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளதுமே அவற்றை விநியோகிக்க முடியாதுள்ளதாகவும் கூறினார்.
அதுமட்டுமல்ல இதேபோன்ற பிரச்சினை எல்லாத் தேர்தல்களிலும் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பான இடங்களிலுள்ள தபாலகங்களில் இந்த வாக்காளர் அட்டைகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. அந்தத் தபாலகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான முழு முயற்சியையும் மேற்கொண்டதாகவும் விநியோகிக்கப்படாத வாக்காளர் அட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதற்கு முழு உத்தரவாதம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தமக்குரிய வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளாத வாக்காளர்கள் அவற்றைத் தமது ஆளடையாளத்தை நிரூபிக்கத் தமது பகுதி அஞ்சல் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர் தமக்குரிய வாக்காளர் அட்டைகள் இதுவரை தமக்கு விநியோகிக்கப்படவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் கண்காணிப்பு பிரிவின் தலைவர் தமியா கிருல தெரிவித்துள்ளார்.
அவை தேர்தலின்போது தவறாகப் பயன்படுத்தும் நோக்கத்திலேயே விநியோகிக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.