* திருமலையில் அமைச்சர் மகிந்த விஜயசேகர
தொடர்ந்து நட்டத்தில் இயங்கிவரும் தபால் திணைக்களத்திற்கு கடந்த வருடத்தில் 300 மில்லியன் ரூபா நஷ்டமேற்பட்டிருப்பது அரசிற்கு பெரும் சுமையான ஒரு விவகாரம் என தொலைத் தொடர்புகள் அமைச்சர் மகிந்த விஜயசேகர தெரிவித்தார்.
கடல்கோள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் சர்வதேச ஒத்துழைப்பிற்கான ஜப்பானிய வங்கியின் 1.2 மில்லியன் ரூபா நிதியுதவியில் அமைக்கப்பட்ட திருகோணமலை அஞ்சல் அதிபர் அலுவலகத்திற்கான புதிய கட்டித்தை திறந்து வைத்து அமைச்சர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தபால் திணைக்களத்தை சிறப்பாக இயங்கவைப்பதற்கு அமைச்சு முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அவர் மேலும் தகவல் தருகையில்;
அஞ்சல் திணைக்களத்தை லாபத்தில் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அமைச்சு வெஸ்டர்ன் யூனியன், டயலொக் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் யோசனை பற்றி பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
லாபத்தில் வெற்றிகரமாக அஞ்சல் திணைக்களத்தை இயங்கவைப்பது தொடர்பாக ஆராயும் உயர்மாநாடு ஒன்றை விரைவில் கொழும்பில் நடத்தவுள்ளோம். மாவட்ட, மாகாண மட்ட அஞ்சல் உத்தியோகத்தர்கள் இம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிகழ்வில் அரசியல் பேச நான் விரும்பவில்லை. வடக்கு, கிழக்கு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கொண்டு வரப்பட்ட மாகாணசபை முறை நாட்டின் ஏனைய பகுதிகளில் இயங்கிவருகின்றது.
ஆனால், வடக்கு, கிழக்கில் அது இல்லை. இப்போது கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது. மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.
ஆனால், வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கக்கூடாது என்று தெற்கில் குரல் எழுப்புகின்றார்கள். கூடுதல் அதிகாரம் தேவை என்று வடக்கு, கிழக்கில் கோரப்படுகிறது. மாகாணசபை அமைக்கப்படுவதற்கு முன்பு அதிகாரம் போதும், போதாது என்று எவ்வாறு கூறுவது என தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டுறவு துறை அபிவிருத்தி அமைச்சருமான நஜீப் அப்துல் மஜீத் பேசுகையில்;
கிழக்கின் உதயம் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் பல அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹபரணை திருகோணமலை நெடுஞ்சாலை, திருகோணமலை -
புல்மோட்டை வீதி, கிண்ணியா- மட்டக்களப்பு வீதி ஆகியவற்றின் புனர்நிர்மான வேலைகள் நடைபெற்று வருகின்றன. திருமலை- புல்மோட்டை வீதியில் மூன்று பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
மின் விநியோகமின்றி இருக்கும் பிரதேசங்களுக்கு மின்னொளி வழங்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
பிரதியமைச்சர் வி.புத்திரசிகாமணி, மின்சக்தி அமைச்சர் ஜோன் செனவிரத்தின, ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திருமலை அமைப்பாளர் ஆரியவதி கலப்பதி ஆகியோரும் பேசினர். கிழக்கு மாகாண பிரதித் தபால்மா அதிபர் என். இரட்ணசிங்கம், திருகோணமலை மாவட்ட அஞ்சல் அத்தியட்சர் கே.எஸ்.ஜெபரத்தினம் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
மாவட்ட அஞ்சல் அத்தியட்சர் அலுவலக அதிகாரி எஸ்.குமணன் நன்றியுரை கூறினார். ஆரம்ப நிகழ்வாக இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதகுருமார்கள் ஆசியுரை வழங்கினர்.
இந்நிகழ்வின்போது திருமலை மாவட்ட அஞ்சல் அத்தியட்சர் அலுவலகம் அமைந்துள்ள பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.