* இறுதி நேரத்தில் காப்பாற்றிய இந்திய கடலோர காவல்படை
நடுக்கடலில் தவித்த 5 இலங்கை மீனவர்கள் உயிர்பிழைக்க கடவுளை வேண்டி படகில் மொட்டை அடித்த பரிதாப சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இலங்கையில் திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அபா தனுஷ்க் (வயது 28), அமர சந்தீர்வா (19 வயது) , நுவான் (20 வயது), சனத் தர்ஷன் (20 வயது ) மற்றும் ரூவான் பிரியந்த் (26 வயது) இவர்கள் அனைவரும் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்கள்.
கடந்த மாதம் 24 ஆம் திகதி திருகோணமலையில் இருந்து ஒரு சிறிய விசைப்படகில் இவர்கள் 5 பேரும் கடலில் மீன்பிடித்து வரப் புறப்பட்டார்கள். புறப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால், அவர்களால் படகை சரியாகச் செலுத்தி மீன்களைப் பிடிக்க முடியவில்லை.
சொந்த ஊரில் இருந்து புறப்பட்டு 3 நாட்கள் ஆகியும் அவர்களால் சிறிய அளவு மீன்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. அதனால், ஊர் திரும்ப முடிவு செய்தனர். இந்த நிலையில் தான் அவர்களுக்கு சோதனை ஏற்பட்டது. வங்கக்கடலில் நர்கீஸ் புயல் சின்னம் உருவானது. இதனால், அடித்த பலத்த காற்றில் அவர்களது படகில் இருந்த இயந்திரம் திடீரென கழன்று கடலுக்குள் விழுந்துவிட்டது. இதனால், படகு செயலிழந்து நடுக்கடலில் நின்றுவிட்டது.
கடலில் காற்று பலமாக வீசிக் கொண்டிருந்ததால் படகு இப்படியும் அப்படியும் அசைந்து காற்றுப்போன போக்கில் திசை மாறிச் சென்று கொண்டிருந்தது.
இதனால், செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் செயற்கைக்கோள் உதவியுடன் செயற்படும் வயர்லஸ் கருவி இருந்தது. அதன் உதவியுடன் இலங்கையில் உள்ள மற்ற நண்பர்களைத் தொடர்பு கொண்டு தங்கள் உயிரைக் காப்பாற்ற ஏதாவது நடவடிக்கை எடுக்கும்படி கெஞ்சினார்கள்.
இதைத் தொடர்ந்து இலங்கை பொலிஸுக்கும் இலங்கை அரசுக்கும் நண்பர்கள் தகவல் தெரிவித்தார்கள். இந்திய கடலோரக் காவல்படைக்கு இலங்கை அரசு தங்கள் மீனவர்களின் உயிரைக் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்தது. இதற்குள் 4 நாட்கள் ஓடிவிட்டிருந்தது. அவர்களிடம் போதுமான உணவுப்பொருள் இருந்ததால் அதை வைத்து பசி பிரச்சினையை சமாளித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், ஒரு கட்டத்தில் அவர்களது படகில் தண்ணீர் புக தொடங்கியது. இதனால், படகு மெல்ல, மெல்ல கடலில் மூழ்க ஆரம்பித்தது. இதனால், அவர்களுக்கு உயிர் பற்றிய பயம் ஏற்பட்டது. தங்களை எப்படியாவது உயிர் பிழைக்க வைக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டார்கள். அதுமட்டுமன்றி மூழ்கிக் கொண்டிருந்த படகிலேயே ஒருவர் மாறி ஒருவர் தங்களுக்குள் மொட்டை அடித்து பிரார்த்தனை செய்து கொண்டார்கள்.
அவர்கள் வேண்டுதலுக்கு பலன் கிடைத்தது. இலங்கை அரசு கேட்டுக் கொண்டதால், டெல்லியில் உள்ள கடலோரக் காவல்படையின் மீட்பு மற்றும் செயல்பாடுகள் பிரிவு, இலங்கை மீனவர்களை மீட்குமாறு கிழக்குக் கடலோரக் காவல்படைக்கு தகவல் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, கிழக்கு கடலோரக் காவல்படையின் கப்டன் வேணு மாதவ் தலைமையிலான ஊழியர்கள் `கிட்டூர் சென்னம்மா' கப்பலில், இலங்கை மீனவர்களை தேடத் தொடங்கினார்கள். தீவிர தேடுதலுக்குப் பிறகு, சென்னையில் இருந்து 300 கி.மீ. கிழக்கே சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் கடலோரக் காவல்படையினர் கண்டுபிடித்தனர்.
அப்போது, மீனவர்களின் படகு தலைகீழாக கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். உடனடியாக கயிறு வீசி, படகில் இருந்த 5 மீனவர்களையும் கடலோரக் காவல்படையினர் தங்கள் கப்பலுக்கு அழைத்து வந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் அவர்களின் கண்ணெதிரிலேயே அந்த படகு முழுவதுமாக கடலில் மூழ்கியது. இதனைப் பார்த்த மீனவர்கள், கடலோரக் காவல்படையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்கள்.
பின்னர், சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் சென்னை துறைமுகத்துக்கு அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். அவர்களிடம் கடலோரக் காவல்படை அதிகாரி கமாண்டன்ட் ராஜன் விசாரணை மேற்கொண்டார். அவர்களில் ஒருவர் மட்டும் தமிழில் பேசினார்.
அதன்பிறகு, சென்னை பொலிஸில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டார்கள். சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் விசாரணை மேற்கொள்வார்கள். விசாரணையில், அவர்கள் மீனவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டால், ஒருசில நாட்களில் அவர்கள் ஊர் திரும்ப வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.