மினுவாங்கொடை மற்றும் இரத் மலானை பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸாரும் படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு மற்றும் தேடுதலின்போது 41 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரத்மலானையில் கைதானவர்களில் இருவர் பெண்களென கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.
மினுவாங்கொடையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களெனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் தாம் மினுவாங்கொடைப் பகுதிக்கு வந்ததற்கான காரணத்தை சரியாக உறுதிப்படுத்தாததன் காரணமாகவே கைது செய்யப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சில தினங்களாக கொழும்பு உட்பட அதன் புறநகர்ப் பகுதிகளில் படையினரும் பொலிஸாரும் இணைந்து பாரிய சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல்களை மேற்கொண்டு வருவதும் தெரிந்ததே.