* லக்ஷ்மன் கிரியெல்ல கூறுகிறார்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆயுத பாணிகளுடன் நிராயுத பாணிகளாக ஐ.தே.க. போட்டியிட வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, கிழக்கிலுள்ள 6 ஆயிரம் ஊர்காவல் படையினரையும் சமுர்த்தி அதிகாரிகளையும் தமது வெற்றிக்காக செயற்பட வேண்டுமென அரசு கடும் உத்தரவிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சி கிழக்கு மாகாணத் தேர்தல் சம்பந்தமாக அதன் நிலைப்பாடுகள் பற்றி ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக கொழும்பு சேர் மாக்கஸ் பெர்னாண்டோ வீதியிலுள்ள எதிர்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கையில்; கிழக்கில் போட்டியிடும் ஐ.தே.க. தவிர்ந்த 3 குழுவினரும் ஆயுதங்களுடன் நடமாடும் சூழ்நிலையில் ஐ.தே.க. நிராயுதபாணிகளாகத் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. உலக வரலாற்றில் ஆட்சியிலுள்ள அரசு ஒன்று ஆயுதம் தரித்த குழுவினருடன் தேர்தல் உடன்படிக்கை செய்திருப்பது முதன்முறையாக இலங்கையிலேயே நடந்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ கிழக்கு மாகாணத்தில் 110,000 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுவிட்டார். தற்போது கிழக்கு மாகாணத்தில் நிலவும் குழப்பநிலையின் பின்னணியில் ராஜபக்ஷ அரசு வெற்றி பெறலாமென கனவு காண்கிறது.மேலும் தற்போது கிழக்கு மாகாணத்தில் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாகியுள்ளனர். ஒரு இலட்சத்து முப்பதாயிரம் வீடுகள் வரையில் நாசமடைந்துவிட்டன. இதேவேளை, நிவாரண விலைக்கு மக்கள் பெற்று வந்த அரிசி தற்போது கிலோ 110 வரையில் உயர்ந்துவிட்டது.
இன்று கிழக்கு மாகாணத் தேர்தல் ஒரு யுத்தகளம் போலாகிறது. ஆயுதங்களுடன் மூன்று குழுக்கள் நடமாடுகின்றன. பிள்ளையான் குழுவினர் எதிர்த்தரப்பினருக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கின்றனர். மேலும் அரச உத்தியோகத்தர்கள், வாகனங்கள் மற்றும் வசதிகளை, அரச நிறுவனங்களை அரச தரப்புக் குழுவினர் சார்பாகப் பயன்படுத்த அமைச்சரவை பூரண அதிகாரம் வழங்கியிருக்கிறது.
கிழக்கிலுள்ள 6000 வரையான ஊர்காவற்படையினரையும் கிராமிய மட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களையும் அரச தரப்பினரின் வெற்றிக்காகச் செயற்படும்படி அரசு கட்டாயப்படுத்தியுள்ளதுடன், தேர்தலுக்குப் பின் சமுர்த்தி அட்டைகள் மற்றும் சலுகைகள் வழங்குவதாகவும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும் கடந்த தேர்தலில் சமுர்த்திக் கொடுப்பன 5 வீதமாக அதிகரிப்பதாக வாக்குறுதி அளித்த ராஜபக்ஷ அரசு 50 வீதமான சமுர்த்திக் கொடுப்பனவுகளை நிறுத்திவிட்டதைக் கிழக்கு மாகாண மக்கள் மறக்கமாட்டார்கள்.