கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான உயர் மட்டக் கூட்டம் இன்று திங்கட்கிழமை கொழும்பில் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகளும் உயர் இராணுவ, பொலிஸ் அதிகாரிகளும் இதில் கலந்துகொள்வார்கள்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சுமார் 10 இலட்சம் பேர் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இக் கூட்டத்தில் ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பிரசார நடவடிக்கையில் இடம்பெற்ற சில சம்பவங்களைத் தொடர்ந்து, மாகாண சபைத் தேர்தலிலும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது தவிர்க்க இக்கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.கடந்த மார்ச் 13 ஆம் திகதி வேட்பாளர் நியமனங்கள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து ஆரம்பமான பிரசார நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 7 ஆம் திகதி புதன்கிழமையுடன் முடிவடைகின்றது.
இத்தேர்தல் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவதுடன், இத்தேர்தலில் கடமையாற்றுவதற்காக நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்தும் அதிகாரிகளும் ஊழியர்களும் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, இத்தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஆசியாவின் ஒன்பது நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் நேற்று இங்கு வரவிருந்ததாகவும் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.