அம்பாறை மத்திய பஸ் நிலையம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆளும் கட்சியைச்சேர்ந்தவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி பிரதம அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளருமான தயா கமகே படுகாயமடைந்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க கலந்து கொள்ளவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்ட மேடை மற்றும் ஏற்பாடுகளை ஆதரவாளர்களுடன் இணைந்து பிரதம அமைப்பாளர் தயாகமகே நேற்று அதிகாலை 3 மணியளவில் மேற்கொண்டிருந்த போது, வாகனங்களில் வந்த ஒரு கோஷ்டியினர் பொல்லுகள், தடிகள் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களைத் தாக்கினார்கள்.
இதன்போது அவர்களைத்தடுத்து நிறுத்த பிரதம அமைப்பாளர் தயாகமகே முயற்சித்தபோது அவரையும் அவர்கள் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.இதனையடுத்து அங்கு நின்ற ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள், வாகனங்களில் வந்தவர்களைத் திரும்ப்பித்தாக்கத் தொடங்கவே அவர்கள் தமது வாகனங்களில் ஏறி அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளர் தயாகமகே அம்பாறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து அம்பாறை பொலிஸ் நிலையத்திலும், தேர்தல் கண்காணிப்புக்குழுவிடமும் முறையிடப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே இதனைச் செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.