வடமாகாண ஆளுநராக ஓய்வு பெற்ற இராணுவ சிரேஷ்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய கடேற் படையின் இயக்குநர் நாயகமான மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர, முன்னர் யாழ். குடாநாட்டில் 51ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக இருந்தவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாண சபையின் ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென பல தமிழ் அரசியல் கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல தமிழ் அரசியல்வாதிகள் வடமாகாண ஆளுநர் பதவியை பொறுப்பேற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இதனால் தமிழ் அரசியல் வாதிகளுக்கிடையே ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக தற்போது சிங்கள இனத்தவர் ஒருவரை வட மாகாண ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வடமாகாண நிர்வாகத்திற்கான விசேட செயலணிக்குழு அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா தலைமையில் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த மாகாணத்திற்கு ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
ஏற்கனவே கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படை சிரேஷ்ட அதிகாரியொருவர் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.