மணலாறு மற்றும் மன்னார் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற கடும் மோதல்களில் பத்துப்படையினர் கொல்லப்பட்டும் 15 க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
மணலாறில் காலை முதல் நடைபெற்ற மோதல்களில் எட்டுப் படையினர் கொல்லப்பட்டும் 12 படையினர் காயமடைந்துள்ளதுடன், மன்னாரில் இடம்பெற்ற மோதல்களில் இரு படையினர் கொல்லப்பட்டும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் படைத் தரப்பு தெரிவித்துள்ளது.
இதேநேரம், இந்த மோதல்களில் 35 புலிகள் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
மணலாறில் ஆண்டான்குளம் பகுதியில் நடைபெற்ற மோதலில் 3 படையினரும் ஜனகபுர பகுதியிலும் ஜனகபுரவுக்கு மேற்கே நடைபெற்ற மோதலிலும் தலா இரு படையினரும் எத்தவெட்டுனுவெவ பகுதியில் நடைபெற்ற மோதலில் மேலும் ஒரு இராணுவச் சிப்பாயும் கொல்லப்பட்டனர்.
இதேநேரம் மன்னார் அடம்பன் பகுதியில் நடைபெற்ற மோதலில் இராணுவத் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதைவிட மன்னார் நெடுக்கண்டல் பகுதியிலும் இரு தரப்புக்குமிடையே சனிக்கிழமை கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன.
மணலாறு பகுதியில் இரு தரப்புக்குமிடையே கடந்த சில தினங்களாகத் தொடர்ச்சியாக கடும் ஷெல் தாக்குதலும் நடைபெற்று வருகின்றது.
இந்த ஷெல் தாக்குதலால் இரு தரப்புப் பகுதிகளிலுமிருந்து பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.