மியன்மாரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கடும் சூறாவளி தாக்கியதில் 350 க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ள அதேவேளை, ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தமான் அருகே வங்காள விரிகுடாவில் உருவாகி வடகிழக்காக நகர்ந்த இச்சூறாவளி, நேற்று மாலை மியன்மாரைப் பலமாகத் தாக்கியது.
நர்கீஸ் என்ற இச்சூறாவளியானது மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்ததால் வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டும் கட்டிடங்கள் பலத்த பாதிப்புக்குமுள்ளாகின. மரங்கள், மின்சார மற்றும் தொலைபேசிக் கம்பங்களும் அடியுடன் சரிந்தன.
இதனால், மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீதிகளில் மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ள இயலாத நிலையும் காணப்படுகின்றது.
கடல் அலைகள் சுமார் 12 அடி உயரத்துக்கு மேல் எழுந்து கடற் கரைப் பிரதேசத்தைத் தாக்கியதால் கரையோரப் பிரதேசங்கள் பாரிய சேதங்களுக்குள்ளாகின.
அத்துடன் கடலுக்குச் சென்ற மீனவர்களின் நிலை பற்றி இதுவரை எந்தத் தகவல்களும் இல்லையென்றும் அவர்களைத் தேடும் பணியில் இராணுவ ஹெலிகொப்டர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.
பலியான 351 பேரில் 162 பேர் மியன்மாரின் தென்மேற்குக் கரையில் அமைந்துள்ள ஹைய்ஸ்ஜி தீவினைச் சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை, ஒரு சில கிராமங்கள் முற்றாக அழிந்து போயுள்ளதுடன் இறாவாடிஸ் லபுட்டா நகரின் 75 வீதமான கட்டிடங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன.
மேலும் யங்கூனிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானங்கள் அனைத்தும் இடையிலேயே திரும்பி மண்டலேய் விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டன.
இச்சூறாவளி தொடர்பாக மியன்மாரிலுள்ள மனித நேயப் பணியாளர் ஒருவர் தெரிவிக்கையில்;
மியன்மாரை 120 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கிவரும் நர்கீஸ் சூறாவளியினால் அப்பகுதியில் பாரிய உயிர்ச்சேதமும் கட்டிடச் சேதமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் மருத்துவமனைகள், பாடசாலைகள், ஹோட்டல்கள் என்பனவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதால் இடம்பெயரும் மக்களும் தங்குவதற்கு இடமின்றித் தவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களின் இயல்பு நிலை முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருக்கும் அதேவேளை, குடிநீர், உணவு மற்றும் மின்சார வசதிகளின்றி மக்கள் அல்லல் படுகின்றனர்.
மீட்புப் பணிகளில் இராணுவத்தினரும் ஏனைய அவசர உதவி அமைப்புகளும் ஈடுபட்டிருந்தும் கடும் மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகள் மந்த கதியிலேயே நடைபெறுகின்றது.
ஐ.நா. பணியாளர்கள் அத்தியாவசியப் பொருட்களுடன் நாளை (இன்று) மியன்மாருக்கு வருகை தருவார்களென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.