மிதாலி ராஜ் அரைச்சதம் அடித்து அசத்த இலங்கைக்கு எதிரான ஆசிய கிண்ண பெண்கள் கிரிக்கெட் லீக் போட்டியில் இந்தியா 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ண பெண்கள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. பங்களா தேஷூக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி 182 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. நேற்று முன்தினம் தம்புள்ளையில் நடந்த இரண்டாவது லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி இலங்கையை எதிர்கொண்டது. நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய கருஜெயின், ஜெயா சர்மா சுமாரான தொடக்கம் கொடுத்தனர். இவர்கள் முறையே, 29 மற்றும் 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து முதல் போட்டியில் சதமடித்த கப்டன் மிதாலி ராஜ் வந்தார். இவருக்கு பூர்ணிமா நல்ல ஒத்துழைப்புக் கொடுக்க ஓட்ட எண்ணிக்கை நன்றாக உயர்ந்தது.
சிறப்பாக விளையாடிய மிதாலி 9 பவுண்டரி உட்பட 54 ஓட்டங்கள் எடுத்தார். 44 ஓட்டங்கள் எடுத்த பூர்ணிதா அரைச்சதம் அடிக்கும் வாய்ப்பை 6 ஓட்டங்களில் நழுவ விட்டார். மற்ற வீராங்கனைகள் விரைவில் வெளியேற, இந்திய பெண்கள் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 227 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை வீராங்கனைகளை ருமிலி தர் மிரட்டினார். இவரது வேகத்தில் குமாரிகமி (12), சுரங்கிகா (0) வரிசையாக வெளியேறினர். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய தேதனு சில்வா அரைச்சதம் அடித்தார். இவர் 87 பந்தில் ஒரு சிக்ஸர், 12 பவுண்டரி உட்பட 74 ஓட்டங்கள் எடுத்தார். சசிகலா 24, கௌசல்யா 10 ஓட்டங்கள் எடுத்தனர். அடுத்து வந்த வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழக்க, இலங்கை பெண்கள் அணி 50 ஓவரில் 198 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.
நேற்று முன்தினம் நடந்த மற்றொரு போட்டியில் பங்களாதேஷ் பெண்கள் அணி பாகிஸ்தானை சந்தித்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் பெண்கள் அணி 47.4 ஓவரில் 134 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதை சேஸ் செய்த பங்களாதேஷ் அணி 45.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து சாதித்தது.