`கட்ச்' சர்ச்சையில் மைதானத்தில் மோதிக்கொண்ட விவகாரத்தில் கங்குலி, ஷேன் வோர்னுக்கு தலா 10 சதவீதம் போட்டிக் கட்டணத்திலிருந்து அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது. பிரச்சினையை சரியாக அணுகாத நடுவர் ஒரு போட்டிக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 19 ஆவது ஆட்டம் ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் ஷேன் வோர்ன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைற் ரைடர்ஸ் அணியை தோற்கடித்தது.
ஆட்டம் நடந்து கொண்டிருந்த போது கங்குலிக்கும், வோர்னுக்கும் திடீரென மோதல் ஏற்பட்டது. கங்குலி 49 ஓட்டங்களில் ஆடிக்கொண்டிருந்த போது யூசுப் பதான் பந்தை தூக்கியடித்தார். இதனை டீப் மிட்விக்கெட் பவுண்டரி பகுதியில் நின்ற ஸ்மித் பாய்ந்து விழுந்து பிடித்தார்.
ஆனால் `கட்ச்' செய்த விதத்தில் கங்குலிக்கு திருப்தியில்லை. தரையில் பந்துபட்டு விட்டதாக நடுவரிடம் வாக்குவாதம் செய்த கங்குலி, 3 ஆவது நடுவரின் முடிவுக்கு விடும்படி முறையிட்டார். ஆனால், வோர்ன் மற்றும் சகவீரர்கள் இது சந்தேகமில்லாத சரியான கேட்ச். 3 ஆவது நடுவரின் கவனத்துக்கு போகக்கூடாது என்று கூறினார்கள்.
இருப்பினும் 3 ஆவது நடுவர் ஆசாத் ராப்பின் தீர்ப்புக்கு விடப்பட்டது. ரி.வி.ரிப்ளேயில் `கட்ச்' செய்த காட்சி மிகத் துல்லியமாகத் தெரியவில்லை. இதையடுத்து சந்தேகத்தின் பலன் துடுப்பாட்ட வீரருக்கு சாதகமாக அளிக்கப்பட்டது. இதனால் வோர்ன் மற்றும் அந்த அணி வீரர்கள் ஏமாற்றமடைந்தனர்.
போட்டி முடிந்ததும் கங்குலி மீது சரமாரியான புகார்களை அள்ளி வீசிய வோர்ன் கங்குலி சரியான உணர்வுடன் விளையாடவில்லை. 3 ஆவது நடுவரின் கருத்தைக்கோரும் உரிமை வீரர்களுக்கு கிடையாது. மேலும் ஆட்டம் தொடங்கும் போது அவர் 5 நிமிடங்கள் எங்களைக் காத்திருக்க வைத்தது ஏமாற்றமளித்தது என்றார்.
இதற்குப் பதிலடி கொடுத்த கங்குலி `யார் எதைப் பற்றி பேசுவது என்றே தெரியவில்லை. என்னைப் பற்றி குறை கூறுவதற்கு முன்பாக வோர்ன் தனது முந்தைய நடத்தையை எண்ணிப் பார்க்க வேண்டும். ஸ்மித் பந்தைப் பிடித்ததில் எனக்கு சந்தேகமிருந்ததால் நடுவரிடம் முறையிட்டேன் என்றார்.
இந்த நிலையில் இந்த மோதல் குறித்து ஐ.பி.எல். அதிகாரிகள் மற்றும் போட்டி நடுவர் பரூக் என்ஜீனியர் ஆகியோர் விரிவாக விவாதித்தனர். இதன் முடிவில் நடவடிக்கை விபரங்களை ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி அறிவித்தார்.
களத்தில் முரண்பாடாக நடந்து கொண்ட குற்றத்துக்காக கங்குலிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், போட்டி கட்டணத்திலிருந்து 10 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது. களத்தில் இருக்கும் நடுவரிடம் சென்று தீர்ப்பை 3 ஆவது நடுவரின் முடிவுக்கு விடும்படி வலியுறுத்துவது ஐ.சி.சி.விதி மீறலாகும் . இதன் அடிப்படையில் கங்குலி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த ஆட்டத்துக்கு நடுவராக செயல்பட்ட 51 வயதான பிரதாப் குமார் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. ரி.வி. நடுவரின் முடிவுக்கு விட வேண்டுமென்று கங்குலி வலியுறுத்தியதை பிரதாப் குமார் ஏற்றுக்கொண்டதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே நடுவர் பிரதாப் குமார் ஒரு போட்டிக்கு இடை நிறுத்தப்பட்டிருப்பதாக லலித் மோடி கூறினார்.
இந்த தண்டனையிலிருந்து வோர்னும் தப்பவில்லை. வோர்ன் ஐ.சி.சி. நடத்தை விதி 1.7 பிரிவை மீறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, பகிரங்கமாக விமர்சிப்பது, போட்டி தொடர்பான நிகழ்வுகள் மற்றும் அதிகாரிகளை ஏற்றுக்கொள்ளத்தகாத கருத்துகளால் விமர்சிப்பது ஆகியவை இந்த விதியில் வருகிறது. இந்த விதியை அவர் மீறியிருப்பதால் வோர்னுக்கும் போட்டிக் கட்டணத்திலிருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது.
`விளையாட்டை சரியான உணர்வுடன் விளையாட வேண்டுமென்பது தான் எங்கள் நோக்கம். இதை விளையாட்டு வீரர்களும், அலுவலர்களும், நடுவர்களும் தெரிந்திருக்க வேண்டியது முக்கியம்' என்று லலித் மோடி கூறினார்.
ஏற்கனவே ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அறைந்ததற்காக ஹர்பஜன்சிங்குக்கு 11 போட்டியில் விளையாடத் தடையும், ஷ்ரீசாந்தை வெளிப்படையாக விமர்சித்து பத்திரிகையில் பேட்டி கொடுத்ததாக நடுவர் அமிஷ் சாகோபா 2 போட்டிக்கு தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.