மொகாலியில் நடந்த விறு விறுப்பான ஐ.பி.எல். லீக் போட்டியில் யுவராஜ் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கங்குலியின் கொல்கத்தா நைற்ரைடர்ஸ் அணியை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்தது. பஞ்சாப் `வேகப்புயல்கள்' போட்டுத் தாக்க பரிதாபமாக வீழ்ந்த கொல்கத்தா அணி தொடர்ந்து நான்காவது தோல்வியை சந்தித்தது.
ஐ.பி.எல். `ருவென்ரி-20' தொடரில், நேற்று முன்தினம் மொகாலியில் நடந்த லீக் போட்டியில் கொல்கத்தா நைற்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற யுவராஜ் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக மார்ஷ், ஜேம்ஸ் ஹோப்ஸ் களமிறங்கினர். அகார்கர் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்த ஹோப்ஸ் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இவர் டிண்டா பந்தில் 18 ஓட்டங்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த சங்கக்கார (10*) காயம் காரணமாக `ரிட்டையர்ஹேர்ட்' முறையில் பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய கப்டன் யுவராஜ் சிறிது நேரம் அதிரடி காட்டினார். ஹபீஸ் வீசிய 9 ஆவது ஓவரின் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரி விளாசினார். இதே ஓவரில் கடைசிப் பந்தில் மீண்டும் சிக்ஸர் அடிக்க முயன்றார். ஆனால் கீப்பர் சாகா மிகத் துல்லியமாக `ஸ்ரம்பிங்' செய்ய...17 ஓட்டங்களுக்கு பரிதாபமாக வெளியேறினார்.
மறுபக்கம் சிறப்பாக விளையாடிய மார்ஷ் (40) ஹசி பந்தில் வீழ்ந்தார். மஹேல ஜெயவர்தன (10) மீண்டும் ஏமாற்றினார். காயத்திலிருந்து மீண்ட சங்கக்கார மீண்டும் களமிறங்கினார். இவர் குல் வேகத்தில் 28 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, கடைசிக்கட்டத்தில் இர்பான் பதான் (24*), பியூஸ் சாவ்லா (21*) அதிரடியாக விளையாடி அணிக்கு கைகொடுத்தனர். இஷாந்த சர்மா வீசிய கடைசி ஓவரில் சாவ்லா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாச, மொத்தமாக 21 ஓட்டங்கள் கிடைத்தன. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ஓட்டங்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைற்ரைடர்ஸ், பஞ்சாப் வீரர்களின் அனல் பந்துவீச்சில் ஆட்டம் கண்டது. மொகாலி ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க... ஸ்ரீசாந்த், இர்பான் பதான் போட்டுத் தாக்கினர். ஸ்ரீசாந்த் வேகத்தில் கப்டன் கங்குலி (5), தாஸ் (5) நடையைக் கட்டினர். பதான் பந்துவீச்சில் ஹபீஸ் (13) ஹொட்ஜ் (1) ஆட்டமிழந்தனர். வி.ஆர்.வி. சிங் பந்தில் சுக்லா (7) போல்டானார். இதையடுத்து 9.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 50 ஓட்டங்கள் என்ற மோசமான நிலைக்கு கொல்கத்தா அணி தள்ளப்பட்டது.
இதற்குப் பின் அணியைக் காக்க டேவிட் ஹசி, சாகா போராடினர். 6 ஆவது விக்கெட்டுக்கு 100 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து சாதனை படைத்தனர். ககன்தீப் வீசிய 13 ஆவது ஓவரில் ஹசி இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசினார். சாவ்லா சுழலில் சாகா இரண்டு சிக்ஸர் அடித்தார். தொடர்ந்து சிக்ஸர்களாக அடித்த ஹசி அரைச்சதம் அடித்தார். இவர் 71 ஓட்டங்களுக்கு ககன்தீப் சிங் பந்தில் வெளியேறினார்.
கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. இர்பான் பதான் அபாரமாகப் பந்துவீசினார். முதல் பந்தில் ஒரு ஓட்டம். இரண்டாவது பந்தில் 2 ஓட்டங்கள் தான் கொடுத்தார். 3,4 ஆவது பந்தில் தலா ஒரு ஓட்டங்கள் 5 ஆவது பந்தில் ஓட்டங்கள் இல்லை. 6 ஆவது பந்தில் சாகா ஆறுதலாக ஒரு பவுண்டரி அடித்தார். கொல்கத்தா நைற்ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு169 ஓட்டங்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. சாகா 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலிருந்தார். பதான் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.