ஐ.பி.எல். தொடரின் பரபரப்பான லீக் போட்டியில் டிராவிட் தலைமையிலான பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணியை 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. லட்சுமண் வழிநடத்திய டெக்கான் அணி தொடர்ந்து ஐந்தாவது தோல்வியை சந்தித்தது. இந்த அணியின் ரோகித் சர்மாவின் அரைச்சதம் வீணானது.
ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடக்கிறது. நேற்று முன்தினம் பெங்களூரில் நடந்த 21 ஆவது லீக் போட்டியில் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற லட்சுமண் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.
பெங்களூர் அணியிலிருந்து ரோஸ் டெய்லர் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக `ருவென்ரி -20' உலகக் கிண்ண தொடரில் பாகிஸ்தானை இறுதியாட்டம் வரை அழைத்துச்சென்ற மிஸ்பா - உல் - ஹக் இடம்பிடித்தார். டெக்கான் அணியில் இலங்கை வீரர் சொய்சாவின் இடத்தை நியூசிலாந்து வீரர் ஸ்கொட் ஸ்டைரிஸ் கைப்பற்றினார்.
பெங்களூர் அணிக்கு தொடக்க வீரர்களாக ஜாபர், சிப்லி களமிறங்கினர். சிப்லி 10 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து விராத் கோஹ்லி வந்தார். விஜய்குமார் வீசிய மூன்றாவது ஓவரில் ஜாபர் இரண்டு பவுண்டரிகள் விளாசி அதிரடி காட்டினார். ஜாபர் 6 பவுண்டரி உட்பட 37 பந்தில் 44 ஓட்டங்கள் எடுத்து அரைச்சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
பொறுப்பில்லாமல் ஆடிய கலிஸ் (6), ஓஜா பந்தில் போல்டானார். இவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கோஹ்லியும் ஆட்டமிழந்தார். ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய கோஹ்லி 29 பந்தில் 38 ஓட்டங்கள் எடுத்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிஸ்பா 3 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
பவுச்சர் 16 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க கடைசி ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர் அடித்து அசத்திய டிராவிட் கடைசிப் பந்தில் பவுண்டரி லைனில் வைத்து `கட்ச்' பிடிக்கப்பட்டார். இவர் 19 பந்தில் 26 ஓட்டங்கள் (2 சிக்சர், ஒரு பவுண்டரி) எடுத்தார். பிரவீண் 8 ஓட்டங்களுக்கு பெவிலியன் திரும்பினார். பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு கில்கிறிஸ்ட் சிறப்பான தொடக்கம் கொடுக்கத் தவறினார். இவர் 10 ஓட்டங்கள் எடுத்தார். கிப்ஸ் (5) வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். அடுத்து, நல்லபோர்மில்' இருக்கும் ரோகித் சர்மா வந்தார். கும்பிளே பந்தில் இமாலய சிக்சர் அடித்து ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினார்.
கலிஸ் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் உட்பட அணிக்கு, 12 ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்தார். கும்பிளே பந்தில் அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகள் அடித்து பொறுப்பான கப்டனாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார். தொடர்ந்து மிரட்டிய இந்த ஜோடி பெங்களூர் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. சிறப்பாக ஆடிய லட்சுமண் 39 ஆவது பந்தில் அரைச் சதம் அடித்தார்.
கலிஸ் வீசிய 17 ஆவது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரோகித் அரைச் சதம் கடந்தார். அடுத்த பந்தில் `மெகா' சிக்சர் ஒன்று விளாசினார். ஆனால், கடைசி பந்தில் ஜாபரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இவர் 3 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 42 பந்தில் 57 ஓட்டங்கள் எடுத்தார்.
அப்ரிடி ஒரு ஓட்டத்திற்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார். இவரைத் தொடர்ந்து லட்சுமண் 52 (7 பவுண்டரி), ஸ்டைரிஸ் 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, டெக்கான் சார்ஜர்ஸ் இக்கட்டில் சிக்கியது. கடைசி ஓவரில் 20 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான சூழ் நிலைக்கு தள்ளப்பட்டது. பரபரப்பான இந்த ஓவரை கும்பிளே வீசினார்.
முதலிரண்டு பந்துகளில் இரண்டு ஓட்டம் தான் கொடுத்தார். மூன்றாவது, நான்காவது பந்தில் பங்கர் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடிக்க ஆட்டத்தில் சூடு பிடித்தது. 2 பந்தில் 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. முழு அனுபவத்தையும் பயன்படுத்திய கும்பிளே அசத்தினார்.
5, 6 ஆவது பந்தில் தலா ஒரு ஓட்டம் மட்டுமே கொடுத்தார். இதையடுத்து டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. பெங்களூர் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் `திரில்' வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக பிரவீண் குமார் தேர்வு செய்யப்பட்டார்.