(நேற்றைய தொடர்ச்சி)
தமிழகத்தின் ஒன்றுபட்ட போராட்டத்தின் விளைவாக தற்காலிகமாக இந்திய அரசு பின்வாங்கிய போதிலும் தனது திட்டத்தைக் கைவிடவில்லை. போராளிக் குழுக்களை பிளவுபடுத்தும் சதித் திட்டத்தை இந்திய றோ உளவுத்துறை வகுத்தது.
1986 ஆம் ஆண்டு மதுரையில் மே 5 ஆம் திகதி அன்று டெசோ அமைப்பின் சார்பில் தமிழீழ ஆதரவாளர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இம்மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக நான் இருந்தேன். இம்மாநாட்டிற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் தலைமை தாங்கினார். ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ், பா.ஜ.க. தலைவர் வாஜ்பாய், லோக்தளத் தலைவர் பகுகுணா உட்பட பல தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டிலும் அனைத்துப் போராளிக் குழுக்களின் பிரதிநிதிகளும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். ஆனால், மாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரும் 1985 ஆம் ஆண்டு தமிழீழத்தில் நான் சுற்றுப்பயணம் செய்தபோது எனக்குப் பாதுகாப்பாக வந்த படைக்குத் தலைமை தாங்கியவருமான கப்டன் லிங்கம், ரெலோ இயக்கத்தவர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கிடைத்தது. இதைத் தொடர்ந்து ரெலோ இயக்கத்திற்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே மோதல்கள் நடந்தன. இது குறித்து 1986 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி சென்னையில் பிரபாகரனை சந்தித்து பேசினேன். அப்போது இந்த மோதல்களின் பின்னணி குறித்து எனக்கு விரிவாகக் கூறினார். "லிங்கத்தின் மரணச் செய்தி வந்தபேது நானே கொதிப்படைந்தேன். தளத்திலிருந்த எங்கள் தோழர்கள் எவ்வளவு பெரிய கொதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள் என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள். தங்கள் படையின் கப்டன் லிங்கத்தை படுகொலை செய்ததை கண்டிக்கவும் கைதான இரு வீரர்களை விடுவிக்கவும் அவர்கள் உடனடித் தாக்குதல் தொடங்க வேண்டிய நிலைமைக்கு ஆளானார்கள். எங்கள் தோழர்களுக்கு வேறு வழி எதுவும் இல்லை. ஏனெனில், லிங்கத்தின் படுகொலையும் எங்களின் முக்கியத் தோழர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் ஏதோ தற்செயலாக நடந்த நிகழ்ச்சியாக நாங்கள் கருதவில்லை. ஆழமான சதியின் விளைவாக இவை நிகழ்ந்தன என்று கருதுகிறோம். றோ உளவு அமைப்பின் தூண்டுதலின் பேரிலேயே சிறீ சபாரத்தினம் இங்கே வந்து முகாமிட்டு இருக்கிறார் என்பதும் எங்களுடன் மோதி எங்களை ஒழித்துக் கட்டுவதே அவரின் திட்டம் என்பதற்கான சாட்சியங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன. எனவே, எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம்.
ரெலோ இயக்கத்தைத் தொடர்ந்து 1986 ஆம் ஆண்டின் இறுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப்.இயக்கமும் றோவின் வலையில் விழுந்து விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்ட முயற்சி செய்தது. எனவே, வேறு வழியில்லாத நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தினரிடமிருந்த ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் களையப்பட்டன . ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்தாமல் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தை விடுதலைப் புலிகள் நிராயுதபாணிகளாக்கி அவரவர் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பினர். ராஜீவ்- ஜெயவர்த்தனா உடன்பாடு கையெழுத்தான பிறகும் கூட தனது சீர்குலைவு வேலைகளை றோ நிறுத்தவில்லை. ஒப்பந்தப்படி ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு விடுதலைப் புலிகள் நிராயுத பாணிகளாகக் காட்சிதரும் வேளையில் அவர்களை ஒழித்துக்கட்ட போட்டி இயக்கங்களைச் சேர்ந்தவர்களை இந்திய இராணுவ விமானங்களின் மூலம் இலங்கை கொண்டு வந்து இறக்கியது.
விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதற்கு பிற போராளி இயக்கங்களை றோ உளவுத்துறை பயன்படுத்தி வருவது குறித்து மனம் வருந்திய பிரபாகரன் அவர்கள் தங்களோடு இணைந்து போராட முன் வருமாறு பிற போராளி இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் அறிக்கை ஒன்றினை 25.9.1987 அன்று வெளியிட்டார். அன்றும் சரி இன்றும் சரி இயக்க முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் எந்த சக்தி பின்னணியிலிருந்து இயங்குகிறது என்பதை நான் பகிரங்கமாகவே அம்பலப்படுத்தியுள்ளேன். இந்திய அரசின் அங்கமாக உள்ள றோ உளவுத்துறையின் நாசகார நடவடிக்கைகள் குறித்து தமிழீழ மக்கள் நன்கு அறிவார்கள்.
தமிழீழ இலட்சியத்தில் உறுதிப்பாடும் இயக்கக் கட்டுப்பாடும் உடைய ஒரு தேசிய இயக்கம் தோன்றுவதை இந்த சக்தி அன்றிலிருந்து எதிர்த்து வருகிறது. ஒரு தேசிய விடுதலை இயக்கமாக விடுதலைப் புலிகள் வளர்வது கண்டு அஞ்சிய இந்திய உளவுத்துறை ஏனைய அமைப்புகளை வளர்த்துவிட்டு இயக்க மோதல்களை உருவாக்கி எம்மை அழிக்க முயன்றது. ஆனால், மக்கள் பலம் எமக்கு பக்கபலமாக இருப்பதால் எம்மை அழிக்க முடியவில்லை. தமிழினத்திற்கு ஏற்பட்ட இந்த அளப்பரிய இழப்பிற்கு இந்திய உளவுத்துறை மட்டும் காரணமல்ல.
இந்த உளவுத்துறையின் நயவஞ்சக சூழ்ச்சிக்கு பலியாகிய ஏனைய அமைப்புகளின் தலைமைகளும் இதற்கு காரணமாவர். பதவி வெறிபிடித்த அந்த தலைமைகள் இந்திய உளவுத்துறையின் ஐந்தாம் படையாக இயங்கினார்கள். இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்? என்று கூறிய பிரபாகரன் பிற இயக்கங்களில் உள்ள தோழர்களை இலட்சியப் போராட்டத்தில் இணைய முன்வருமாறு அன்பழைப்பும் விடுத்தார். மேற்கண்டவை எல்லாம் வரலாற்று ரீதியான ஆதார பூர்வமான உண்மைகளாகும்.
போராளிக் குழுக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த மோதல்களைத் தூண்டிய றோ உளவுத்துறை, தனது முயற்சியில் தோல்வி கண்டது. பிற போராளி இயக்கங்கள் புலிகளிடம் மோதி தோற்ற பிறகு புலிகள் இயக்கத்தையே பிளவு படுத்தவும் றோ உளவுத்துறை முயன்றது. 1992 ஆம் ஆண்டு மாத்தையா 2004 ஆம் ஆண்டில் கருணா ஆகியோர் றோ உளவுத்துறையின் வலையில் வீழ்ந்து புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்த முயற்சி செய்து அம்முயற்சியில் படுதோல்வி அடைந்தனர்.
ஆகத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தவும் இந்திய அரசின் றோ உளவுத்துறை தொடர்ந்து செயற்பட்டு வருகிறது என்பது எவராலும் மறுக்க முடியாத ஆதாரபூர்வமான உண்மைகளாகும். இந்த சூழ்நிலையிலும் சிங்கள அரசுக்குத் தொடர்ந்து ஆயுத உதவிகளை இந்திய அரசு செய்து வருகிறது என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மையாகும்.