Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
ஹாய் நலமா?
[06 - May - 2008] [Font Size - A - A - A]
ஈ.சி.ஜி.பரிசோதனை தேவையா?

`நெஞ்சு வலிக்குது. படி ஏற முடியுதில்லை. ஒரு மாடி ஏறினாலே இளைச்சு மூச்சு முட்டுது. இடையில் நின்று சற்று ஆறிய பின்தான் தொடர்ந்து ஏற முடிகிறது. பாரம் தூக்கிக்கொண்டு நடக்கவே முடியுதில்லை' என்றாள் அவள். அவரைப் பரிசோதித்துப் பார்த்த பின் `உங்களது இருதயத்திற்கான இரத்த ஓட்டம் குறைவு போலத் தெரிகிறது. கொலஸ்ரோல், ஈ.சி.ஜி போன்ற பரிசோதனைகள் செய்து பார்க்க வேண்டும்' என்றேன். ஈ.சி.ஜி யா வேண்டவே வேண்டாம்' என்றாள் கோபமாக. `ஏன்?' என்று கேட்டேன்.

`ஈ.சி.ஜி செய்வதில் பிரயோசனமில்லை' என்றவளது குரல் திடீரென மிகுந்த விரக்தியில் ஆழ்ந்தது. `எங்கட சொந்தக்காரர் ஒருத்தர் சும்மா `செக்அப்' எண்டு ஈ.சி.ஜி செய்து பார்த்தவர். ஒண்டும் இல்லை எண்டிட்டாங்கள். மற்ற நாள் திடீரெண்டு ஹாட் அட்டாக்கிலை போட்டார். உந்த ஈ.சி.ஜி பிரயோசனம் இல்லாத வேலை' என்றாள்.

இன்னொரு வயதான மாது. `சரியான களயாகக் கிடக்கு, தலையையும் சுத்துது' என்றாள். பரிசோதித்துப் பார்த்தபோது உடல் வியர்த்து, பிரஸர் தளர்ந்திருந்தது. மாரடைப்பு என்பதாக உணர்ந்தேன். ஈ.சி.ஜி எடுத்துப்பார்க்க வேண்டும்' என்றேன். `நெஞ்சு வலி இல்லைத்தானே, ஏன் வீணாக ஈ.சி.ஜி' என்றாள். கூட வந்தவரும் அதையே வலியுறுத்தினார்.

இவர்களுக்கு மாறாக இருதய நோய்களோடு எந்தவித தொடர்புமற்ற சிலர் ஈ.சி.ஜி எடுத்தே தீர வேண்டும் என அடம் பிடிப்பார்கள்.

இவர்கள் அனைவரும் ஈ.சி.ஜி.யின் பயன்பாடு பற்றிய தெளிவு இல்லாமையால் தான் தவறான முடிவுகளுக்கு வந்தார்கள். முதலாமவர் முதல் நாள் ஈ.சி.ஜி எடுத்தபோதும் அடுத்தநாள் இறந்தது ஈ.சி.ஜி.யின் தவறு அல்ல. வரப் போகிற மாரடைப்பை முதலிலேயே கண்டுபிடிப்பதற்காகச் செய்யப்படுவதல்ல வழமையான ஈ.சி.ஜி.ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டிருந்தால் அதனைக் காட்டும். பயிற்சி ஈ.சி.ஜி. ( Excercise ECG), அன்ஜியோகிராம் ( Angiogram) போன்ற பரிசோதனைகள் மட்டும் மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என்பதை முன்கூட்டியே தெளிவுபடுத்தும். எனவே எடுத்த ஈ.சி.ஜி.யில் எந்த மாற்றமும் இல்லை. சாதாரணமானது என்ற போதும் அஞ்சைனா, மாரடைப்பு ஆகியவற்றிற்கு இட்டுச் செல்லக்கூடிய இருதயநாடி நோய்கள் ( Coronary Artery Disease) இல்லையென முடிவுகட்ட முடியாது. ஆனால் ஈ.சி.ஜி.யில் மாற்றமிருப்பது நோயிருப்பதை உறுதி செய்யும்.

இரண்டாமவர் நெஞ்சுவலி இல்லையென்பதால் ஈ.சி.ஜி வேண்டாம் என்றார். ஆனால் நெஞ்சுவலி இல்லாமல் கூட மாரடைப்பு வருவதுண்டு. வேண்டாம் என்ற அவருக்கு மாரடைப்பு வந்திருந்ததை ஈ.சி.ஜி. தெளிவுபடுத்தியது. எனவே ஈ.சி.ஜி. தேவையா இல்லையா என்பதை ஒருவருக்கு உள்ள அறிகுறிகளைக் கொண்டு வைத்தியரே தீர்மானிக்க வேண்டும். இருந்தபோதும் ஈ.சி.ஜி. மட்டுமே மாரடைப்பைக் கண்டுபிடிப்பதற்கான பரிசோதனை அல்ல. Troponins T போன்ற சில இரத்த பரிசோதனைகள் ஈ.சி.ஜி.யை விட விரைவாகவே மாரடைப்பை கண்டு பிடிக்க உதவுகிறது.

ஆனால் ஈ.சி.ஜி. என்பது வெறுமனே மாரடைப்பைக் கண்டு பிடிப்பதற்கான பரிசோதனை அல்ல. இருதயத்தோடு சம்பந்தப்பட்ட பல நோய்களை வைத்தியர்களுக்குச் சுட்டிக்காட்ட அது உதவுகிறது. இருதயத் துடிப்பின் வேகம், அதன் ஒழுங்கு, இருதய துடிப்பின் சீரின்மை, அதன் தசைகளின் வீக்கம், இருதய வால்வுகளின் நோய்கள் போன்ற பலவற்றை இனங்காண உதவுகிறது. டிஜொக்சின் போன்ற சில மருந்துகளின் பக்க விளைவுகளைக்கூட ஈ.சி.ஜி மூலம் அறியலாம்.

இரத்தப் பரிசோதனைகள் போல வழமையாகச் செய்யப்படும் ஒரு சாதாரண உடல்நலப் பரிசோதனையே இதுவாகும். ஈ.சி.ஜி என்பது எந்தவித பாதிப்பும் அற்ற இலகுவான பரி சோதனையாகும். இதன்போது மின்சாரம் உடலுக்குள் பாய்ச்சப்படுவதில்லை. மாறாக இருதயத்திலிருந்து இயல்பாக எழும் மின் தூண்டுதலையே அது அளவிடுகிறது. ஐந்தோவன் Einthoven என்பவரால் இது 1893 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக அவர் 1924 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
ஹாய் நலமா?
ஆசிய ஊடக சுதந்திரத்தின் நிலைவரம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் மூன்று மாவட்டங்களும்
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழக சட்ட மன்றத்தை அவமதிக்கும் மத்திய
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com