Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
மோசடித்தனமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள்
[06 - May - 2008] [Font Size - A - A - A]
ஈராக்கில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுற்றுலா வீசா மூலம் குவைத் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கைவிடப்பட்ட 20 இலங்கையர்கள் கையில் பணமில்லாத நிலையில் வீதிகளில் பிச்சை எடுத்துவருவதாக குவைத்திலிருக்கும் இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றே ஈராக்கில் சாரதி வேலை பெற்றுத்தருவதாகக் கூறி இந்த இளைஞர்களை சுற்றுலா வீசா மூலம் அங்கு அழைத்துச் சென்றுள்ளது. ஈராக் நாட்டில் தீவிரவாதிகளினால் அன்றாடம் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று கொண்டிருப்பதால் அங்கு வேலை வாய்ப்புக்குச் செல்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பதிவு செய்யப்பட்ட முகவர் நிலையம் இந்த இளைஞர்களை திட்டமிட்டு ஏமாற்றியிருக்கின்றது.

இவ்வாறு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தருவதற்காக சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் தலா இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை மேற்படி முகவர் பெற்றுக்கொண்டிருப்பதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த இளைஞர்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். பதிவுசெய்யப்பட்ட முகவர் தமது அனுமதிப்பத்திரத்தை இவ்வாறு தவறான வழியில் பயன்படுத்தி இருக்கும் நிலையில் எதிர்காலத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் மீது மக்கள் நம்பிக்கை வைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமாத்திரமன்றி இந்த இளைஞர்களை குவைத்துக்கு அழைத்துச் சென்ற முகவர் மிகவும் சூட்சுமமாக அவர்களின் கடவுச்சீட்டுக்களைக் கூட திட்டமிட்டு செல்லுபடியற்றதாக ஆக்கியிருக்கின்றார். இன்று அந்த இளைஞர்கள் தமது சொந்த நாட்டுக்கு திரும்பிவர முடியாத அவல நிலையும் ஏற்பட்டிருக்கிறது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் இவர்கள் விடயத்தில் என்ன செய்யலாமென இலங்கை அரசிடம் கேட்டிருக்கின்றது. உண்மையிலேயே கடவுச்சீட்டோ, பணமோ இல்லாத நிலையில் தவித்துக்கொண்டிருக்கும் இந்த இளைஞர்களை உடனடியாக திருப்பியனுப்புவது இயலாத காரியமென தூதரக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இளைஞர்கள் முகவர் நிலையங்களை நம்பி இலட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்து ஏமாற்றப்பட்டிருப்பது இது முதற் தடவையல்ல. இதற்கு முன்னர் பல தடவைகள் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. பல முகவர்கள் கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவாகியிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்டியாக வேண்டும். ஆனால், இப்படியான முகவர்கள் எவருமே இன்று வரையில் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரப்படவுமில்லை தண்டிக்கப்படவுமில்லை. இதனால், மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் பல விதிமுறைகளை வகுத்துக் கொண்டுள்ள போதிலும் அவற்றை மீறி முகவர்கள் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பதை அரசாங்கம் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சில முகவர்கள் தப்புவதற்கு அரசியல் பின்னணி கூட இருந்திருக்கின்றது. சட்டமும் ஒழுங்கும் சீராக கையாளப்படாத யதார்த்த பூர்வமான உண்மை இந்தச் செயற்பாடுகளின் மூலம் தெளிவாகத் தெரிகின்றது. வெளிநாட்டு வேலை வாய்ப்புக்குச் செல்லும் இலங்கைப் பெண்கள் கூட நாளாந்தம் பெரும் துன்பங்களையும் தொல்லைகளையும் அனுபவித்து வெறுங்கையுடன் திரும்பிய கதைகள் கூட ஏராளம். பலசந்தர்ப்பங்களில் சூட்டுக் காயங்களுடனும் உடல் ஊனமுற்ற நிலையிலும் பெண்கள் திரும்புகின்றனர். இன்னுமொரு வேதனை தரக்கூடிய செய்தி என்னவெனில் இளம் யுவதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டு மாதக்கணக்கில், வருடக்கணக்கில் தண்டிக்கப்படுகின்றனர். சிலர் கற்பை இழக்கும் நிலையும், குழந்தைகளைச் சுமந்து வரும் துர்பாக்கியம் கூட கடந்த காலத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

இப்படி எமது நாட்டு பெண்களும், வேலைவாய்ப்புக்கு செல்லும் இளைஞர்களும் ஏமாற்றப்படுவது தொடர்கதையாகியுள்ள நிலையில் வேலைவாய்ப்புப் பணியகமும், அரசும் வெறுமனே அவர்களை திருப்பி அழைப்பதிலும், இழப்பீடாக சிறு தொகையை கொடுப்பதிலும் காரியத்தை முடித்து விடுகின்றன. முகவர்களால் இழைக்கப்படும் தவறுகள், குற்றங்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதன்காரணமாக முகவர்களிடம் அச்சம் காணப்படவில்லை, இவ்வாறு குற்றமிழைப்பவர்கள் கைதுசெய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை மூலம் தண்டிக்கப்படுவார்களானால் ஏனைய முகவர்கள் எதிர்காலத்தில் தவறிழைக்காமல் செயற்படுவதை உறுதிசெய்ய முடியும். எதிர்காலத்தில் இது போன்ற மோசடிகள், ஏமாற்றுதல்கள், குற்றச்செயல்கள் இடம் பெறுவதைத்தடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கூறவிரும்புகின்றேன். குவைத்தில் பிச்சை எடுக்கும் 20 இளைஞர்களையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வர வெளிநாட்டலுவல்கள் அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com