பறந்து செல்லும் பெண் உருவமொன்று மெக்ஸிக்கோவில் படம் பிடிக்கப்பட்டுள்ளதனால் வேறு கிரகத்துப் பெண் பூமியில் நடமாடுவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு 2006 ஆம் ஆண்டு மே மாதம் இதேபோன்றதொரு செய்தி மெக்ஸிக்கோவில் பரவியது. வானில் அடையாளம் தெரியாத மர்மப் பொருட்களை படம் பிடிக்கும் விண்ணியல் ஆய்வாளர்கள் பலர் மலைப் பகுதியில் தாவித் தாவி பறக்கும் இப் பெண் உருவத்தைக் கண்டுள்ளனர். இந் நிலையில் இரு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த பறக்கும் உருவம் நியூவோ லியோன் மலைப்பகுதியில் நடமாடியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மெக்ஸிக்கோவின் பிரபல விண்ணியல் ஆய்வாளர் அன்னா லூசியா சிட் என்பவர் தலைமையிலான குழுவினர் இதனை உறுதி செய்துள்ளனர். மேலும் இதற்கான வீடியோ பட ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து அன்னா லூசியா தெரிவித்துள்ளதாவது;
மலைப்பகுதியில் பறக்கும் உருவம் நடமாடுவது உண்மை தான்.எங்களின் தொடர்ச்சியான ஆய்வு இதனை, உறுதிப்படுத்துகிறது. பறக்கும் அந்த உருவத்தை படம் பிடித்திருக்கிறோம். ஆனால் அதன் தோற்றம் தெளிவாகப் பதிவாகவில்லை. புகை போன்ற உருவம் மட்டுமே அதில் தெரிகிறது. அந்த உருவம் பெண் போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இவர்களைத் தவிர இரு பொலிஸ் அதிகாரிகளும் இப்பெண் உருவத்தை நேரில் பார்த்துள்ளனர். இவர்கள் இருவருமே வெவ்வேறு நகரங்களில் பணிபுரிபவர்கள். இவ்விருவரும் தற்போது வெளியிட்டுள்ள தகவல்களால் தான் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகளும் விண்ணியல் ஆய்வாளர்களும் ஒரே நேரத்தில் இப்படிச் சொல்வதால் 2006 இல் பார்த்த அந்த பறக்கும் மர்ம பெண் வேறு கிரகத்தை சேர்ந்தவராக இருப்பாரோ என்றும் இறந்து போன பெண்ணின் ஆவியாகக் கூட அது இருக்கலாம் என்றும் உலகம் முழுவதும் பரபரப்பு பரவியுள்ளது.