ஈராக்கின் வடபகுதியில் கடந்த வாரம் தாம் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களில் 150 இற்கும் அதிகமான குர்திஸ் போராளிகள் பலியாகியிருப்பதாக துருக்கிய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் படி தமது தாக்குதல்களில் 150 இற்கும் அதிகமான பயங்கரவாதிகளை தாம் கொன்றுள்ளதாக தமது இணையத்தள செய்தியில் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் குர்திஸ் போராளிகளின் அமைப்பான பி.கே.கே.யின் பேச்சாளர், தமது தரப்பில் 6 போராளிகள் மட்டுமே கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஈராக்கின் வடபகுதியில் நிலைகொண்டுள்ள போராளிகளை அழிக்கும் நடவடிக்கை என்ற பேரில் கடந்த சில மாதங்களாக அப் பிராந்தியம் மீது துருக்கி பல வழிகளிலும் தாக்குல்களை நடத்தி வருகிறது.
இப் பகுதியில் போராளிகளின் முகாம்கள் அமைந்துள்ளதாக கருதப்படும் குவான்டில் மலைப்பகுதி மீது கடந்த வியாழக்கிழமை தாம் தாக்குதல்களை ஆரம்பித்ததாகவும் இந்நடவடிக்கையின் போது இலக்கு வைக்கப்பட்ட போராளிகளின் முகாம்கள் யாவும் அழிக்கப்பட்டதாகவும் துருக்கி இராணுவத்தினரின் அறிக்கை தெரிவித்துள்ளது.
பி.கே.கே. அமைப்பிற்கெதிரான தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கு கடந்த வருடம் ஈராக்கிய பாராளுமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
அத்துடன் துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் சுயாட்சி கோரும் பி.கே.கே.போராளிகள் ஈராக்கின் வட பகுதியை பாதுகாப்பான புகலிடமாக பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த ஈராக் தவறி விட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தது.
1984 இல் இவ்வமைப்பு தனது போராட்டத்தை ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 30,000 இற்கும் அதிகமானோர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுவதுடன் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கி என்பன பி.கே.கே.யை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.