மியன்மாரில் நர்கிஸ் சூறாவளி ஏற்படுத்திய பேரழிவுகளைத் தொடர்ந்து இலட்சக்கணக்கான மக்கள் புகலிட மற்றும் குடிநீர் வசதிகளின்றி தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எங்களுக்குத் தெரிந்த வகையில் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு தற்காலிக புகலிட வசதிகளும் குடிநீர் வசதிகளும் தேவைப்படுகின்றன. ஆனால், இன்னும் எத்தனை இலட்சக்கணக்கானோர் எவ்வித வசதியுமின்றி தவிக்கின்றனரென்பது தற்போது எமக்குத் தெரியாதுள்ளதென பாங்கொக்கிலுள்ள ஐ.நா.வின் அனர்த்த நடவடிக்கைகளுக்கான பொறுப்பதிகாரி றிச்சர்ட் ஹேர்கி தேரிவித்துள்ளார்.
இதேவேளை அதிகளவான இழப்புகளையும் சேதங்களையும் சந்தித்த பகுதிகளை சென்றடைவதற்கு மீட்புப் பணியாளர்கள் போராடிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
190 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய இச் சூறாவளி மியன்மாரின் ஒரு பகுதியில் மட்டும் 200,000 வீடுகளை அழித்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான தொடர்புகள் தற்போது தான் ஆரம்பித்திருப்பதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகின்றது.
இதேவேளை, இந்தப் புயல் தாக்குதலில் 400 பேர் பலியானதாக மியான்மார் அரசுக்கு சொந்தமான செய்திச் சேவை தெரிவித்தது. இவர்களில் யங்கூனில் 100 பேரும் இர்ரவட்டி டெல்வாவில் 300 பேரும் பலியாகியுள்ளனர். இருப்பினும் கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ள உடல்களை மீட்கும் பணி இன்னும் முடிவடையவில்லை. இந்தப் பணி முடிவடையும் போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
மேலும், உட்புற கிராமங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை விவரங்கள் மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகாரிக்கக் கூடும். முழுமையான சாவு எண்ணிக்கை தெரிய சில நாட்கள் ஆகும் என்று ஐ.நா. குழுவினர் தெரிவித்தனர்.