பொலிவியாவின் செல்வந்தர்கள் வாழும் பிராந்தியமான சந்தா குருஸ் மக்கள் தமது பிராந்திய சுயாட்சிக்கு பலத்த ஆதரவு வழங்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் இங்கு நடத்தப்பட்ட உத்தியோகபற்றற்ற அபிப்பிராய வாக்கெடுப்பின் போது 86 வீதமானோர் சுயாட்சிக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக உள்ளூர் தொலைக்காட்சிச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, இவ் அபிப்பிராய வாக்கெடுப்பு சட்ட ரீதியற்றதென தெரிவித்திருக்கும் ஜனாதிபதி எவோ மொராலிஸ் இதன் முடிவுகளை நிராகரிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ் வாக்களிப்பின் போது பரவலாக வன்முறைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் வாக்களிப்பின் பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி மொராலிஸ் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஆளுநர்கள் அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளதுடன் சட்டரீதியற்றதும் அரசியலமைப்புக்கு முரணானதுமான இவ் வாக்கெடுப்பு அப்பிராந்திய மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் பெற்றுத்தரப் போவதில்லையெனத் தெரிவித்துள்ளார்.
சந்தா குருஸிலுள்ள மக்களில் பெரும்பாலானோர் மொராலிசின் இடதுசாரிக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றனர்.
நாட்டின் வளமிக்க கிழக்குப் பிராந்தியமானது ஏழை மக்கள் அதிகளவில் வாழும் மேற்குப் பிராந்தியத்தின் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்க வேண்டுமென மொராலிஸ் விரும்புகிறார்.
பொலிவியாவின் சனத்தொகையில் 25 வீதத்தைக் கொண்டுள்ள சந்தா குருஸ் தலைவர்கள் தமது வளங்களை தாமே நிர்வகிப்பதற்கான அதிகாரங்களைக் கோருகின்றனர்.
அத்துடன் நாட்டின் வறுமையைக் குறைப்பதற்காக வரையப்படவுள்ள புதிய அரசியலமைப்பு தமது வளங்களின் மீது தமக்கிருக்கும் அதிகாரத்தைக் குறைக்குமெனவும் அச்சம் கொண்டுள்ளனர்.
நாட்டின் ஏனைய முன்று மாகாணங்களும் சுயாட்சிக்கான வாக்கெடுப்பை நடத்தப்போவதாக அறிவித்திருப்பதால் சந்தா - குருஸின் வாக்கெடுப்பு முடிவுகள் எவ்வாறான விளைவை ஏற்படுத்தப்போகின்றது என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியென நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.