* பிரதி பொலிஸ் மா அதிபர் உபாலி ஹேவகே தெரிவிப்பு
தமிழர்கள் அனைவருமே புலிகளுக்கு ஆதரவாளர்கள் அல்ல என்று தெரிவித்துள்ள மத்திய, கிழக்கு பிராந்தியத்திற்கு பொலிஸ் பொறுப்பதிகாரியாக புதிதாக நியமனம் பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் உபாலி ஹேவகே, பொதுமக்களின் உதவியுடன் நாட்டை பாதுகாக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற பாதுகாப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று இந்நாட்டில் யுத்தம் தேவையா? இல்லையா? என்பதைவிட ஒவ்வொரு குடிமகனும் தான் வாழும் கிராமத்தையும், கிராம மக்களையும் பாதுகாக்க வேண்டும்.
பொலிஸாரால் மாத்திரம் பாதுகாப்பு வழங்க முடியாது. கிராம மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நான் கடந்த 20 வருடம் வடக்கு, கிழக்கு பகுதியில் கடமை புரிந்துள்ளேன். அங்கு வாழும் தமிழ் மக்கள் சிங்கள மொழியையும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும் கற்றுக்கொள்ளாமையினாலே அங்கு மக்களிடையே பிரச்சினைகள் எழுந்தன.
ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் தமிழர்கள் சிங்கள மொழியிலும் சிங்களவர்கள் தமிழ் மொழியிலும் உரையாடி தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பிரச்சினை இல்லாமல் ஒற்றுமையாக வாழுகின்றார்கள்.
ஆனால், வெளியிலிருந்து வரும் ஒரு சில சக்திகள் மூலம் மக்களிடையே பலபிரச்சினை ஏற்படுத்தவோ அல்லது பயங்கரவாதத்தை இங்கு கொண்டுவருவதற்கு முயற்சி செய்யலாம். அதற்கு இங்கு வாழும் மக்கள் துணை போகக்கூடாது.
இன்று பாடசாலைகளிலும் பஸ்களிலும் தொழிற்சாலைகளிலும் குண்டு வைத்து தகர்க்கின்றார்கள். இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்.
வெளியில் சென்று வீடு திரும்பும் வரை வீட்டிலுள்ளவர்கள் பெரும் பதற்றத்துடன் இருக்க வேண்டிய நிலையிலுள்ளனர்.
ஒரு சில இடங்களில் குண்டு வெடித்ததுடன் அப்பகுதியிலுள்ள தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகின்றார்கள். இதனால் அம் மக்கள் துன்பப்படுகின்றார்கள். தமிழர்கள் எல்லோருமே புலிகளுக்கு உதவி செய்பவர்கள் அல்ல என நான் பொலிஸ் அதிகாரிக்கு தெளிவுபடுத்தியுள்ளேன்.
இந்த பயங்கரவாத சூழ்நிலையால் கதிர்காமம், அநுராதபுரம், கண்டி தலதா மாளிகை போன்ற புனித ஸ்தலங்களுக்கு மக்கள் செல்வதில்லை. அதேபோல இம்முறை இங்கு நடந்த வசந்த கால நிகழ்வுகளிலும் பெருந்திரளானோர் கலந்து கொள்ளவில்லை.
எனவே மக்களையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. நமக்கு தேவையில்லையென பொதுமக்கள் நினைக்கக் கூடாது. பொது மக்களும் பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கினால் தான் நாட்டையும் வீட்டையும் மக்களையும் பாதுகாக்க முடியும். சந்தேகத்திற்கிடமானவர்கள் நடமாடினாலோ அல்லது சந்தேகமான பொதிகளை கண்டால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் நுவரெலியா மாநாகர சபை உறுப்பினர்களுக்கான டி.ஜி. மகிந்த குமார காமினி திஸாநாயக்க, திஸ்ஸ செனவிரட்ன, நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காமினி மதுரட்ட, உதவி பொலிஸ் அத்தியட்சர் சமன்யடவர, நுவரெலியா பொலிஸ் பொறுப்பதிகாரி சூலணிவீரரட்ன ஆகியோருடன் கிராம சேவகர்களும் மக்கள் பாதுகாப்பு குழுக்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.