தொழிலாளர் விடுதலை முன்னணி, ஆசிரியர் விடுதலை முன்னணி ஆகியன இணைந்து நானு ஓயா நகரில் நடத்திய மே தின நிகழ்வின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு. நமது நாட்டில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக நாட்டையும் மக்களையும் ஆட்டிப்படைப்பது ஒரு தேசியப் பிரச்சினையாகும். இனப்பிரச்சினையைத் தீர்க்க இது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கை அனைத்தும் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை காணத்தவறிவிட்டது.
இந்நிலையில் தொடர்ந்தும் யுத்தத்தை முன்னெடுப்பது மூலமாக இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றைக் காண முடியாது. ஆயுதப் போராட்டம் நடத்திய நாடுகள் உலக ரீதியாக கற்றுத்தந்த பாடமாகும். இனப்பிரச்சினை தீர்வில் தேசிய நலனை கொண்டுள்ள அரசாங்கத்திற்குப் பாரிய பொறுப்பிருக்கின்றது. அந்த வகையில் சகல மக்களும் சமத்துவமாக வாழக்கூடிய சமவுரிமையை வழங்கக் கூடிய அரசியல் தீர்வொன்றை அரசியல் சாசனமாக உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது மூலம் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றை ஏற்படுத்த அரசாங்கம் முன் வரவேண்டுமென்ற எமது ஆலோசனையை தீர்மானமாக முன்வைக்கின்றோம்.
தமிழ் பேசும் மக்கள் தமிழ் மொழி மூலம் கருமமாற்றும் உரிமையை வழங்குதல் வேண்டும். நாட்டின் அரச கரும மொழியாக சிங்களமும் தமிழும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. அந்த மொழி உரிமையை தமிழ் பேசும் மக்கள் அனுபவிக்கக்கூடிய வகையில் அவை இன்றும் நிர்வாக மட்டத்திற்கு அமுல்படுத்தப்படவில்லை.
இதனால் தமிழ் பேசும் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கத் திணைக்களங்களும், தஸ்தாவேஜுகளையும் சிங்கள மொழியிலேயே விநியோகிப்பதால் தமிழ் பேசும் மக்கள் தங்களுடைய கருமங்களை சுயமாக செய்துகொள்ள முடியாது பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது.
மொழி என்பது ஒரு மனிதனின் தாய் மொழி என்ற தத்துவத்தைக் கொண்டதாகும். நாட்டில் இன முரண்பாடு ஏற்படுவதற்கு மொழிப் பிரச்சினையும் முக்கியமான காரணியாகும்.
காலம் தாழ்த்தாது சகல அரசாங்கத் திணைக்களங்களிலும் தமிழ் மொழியை நிர்வாக மொழியாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற தீர்மானத்தை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கின்றோம்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்க வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாக உழைத்து வருபவர்கள். பிரித்தானிய காலனித்துவ காலத்தில் நாட்கூலி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த விஞ்ஞான யுகத்திலும் இந்த நாட்கூலி முறையிருப்பது காலத்திற்குப் பொருத்தமானதாக இல்லை. நாட்டில் அனைத்து தொழில் துறையிலும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பள முறை அமுலில் இருக்கின்றது. மாதச் சம்பளத்தின் மூலமாகவே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.
இந்த நாட்கூலி முறையில் அடிமைப்பட்டிருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை தேசிய தொழிலாளர்களின் தரத்திற்கு உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் அரசாங்கம் காலம் தாழ்த்தாது நாட்கூலி முறையை ஒழித்து மாதச் சம்பளம் வழங்கும் முறையினை பெருந்தோட்டத் தொழிலாளர்களை மதித்து வழங்கும் சம்பளக் கொள்கையை உருவாக்க வேண்டும்.
சர்வதேச மகளிர் தினத்தை சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக்க வேண்டும். நாட்டில் உழைக்கும் சகல பெண் தொழிலாளர்களுக்கும் சர்வதேச மகளிர் தினம் சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக்கப்பட்டிருக்கின்றது. பெருந்தோட்டத் தொழிற்துறையில் உழைக்கும் பெண்கள் இன்று வரை இந்த உரிமையை பெறவில்லை. சர்வதேச மகளிர் தினத்தில் தங்களுடைய உரிமையை இழந்து சம்பளம் இல்லாத விடுமுறையாகவே அனுஷ்டித்து வருகின்றனர்.
பெருந்தோட்டப் பெண்கள் சர்வதேச மகளிர் தினத்தை சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக அமுல்படுத்த அரசாங்கம் ஏனைய தொழில்துறையில் உழைக்கும் பெண்கள் அனுபவிக்கும் உரிமையை பெருந்தோட்டத் தொழிற்துறையில் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தேசியப் பொருளாதாரத்தின் பங்காளியாக உழைக்கும் பெண்களுக்கு சர்வதேச மகளிர் தினத்தை சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக வழங்க வேண்டும்.
பெருந்தோட்ட மருத்துவமனைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். பெருந்தோட்ட மருத்துவமனை பிரித்தானிய காலனித்துவ காலத்தில் உருவாக்கப்பட்ட நிலையிலிருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்து வருவது இன்றைய காலத்தேவைக்கு பொருத்தமானதாக இல்லை. பெருந்தோட்ட மருத்துவமனையின் சேவையில் ஏற்பட்டுள்ள அசமந்தப் போக்கினால் பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே தோட்டப்புற மருத்துவமனைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டியது அவசியமானதாகும்.
பெருந்தோட்டப் பிரதேச ஆசிரியர்களுக்கு வீடமைப்புத் திட்டத்தை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். பெருந்தோட்டப் பிரதேசத்திலிருந்து மலையகத் தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்களாகப் பணிபுரிகின்ற இந்த ஆசிரியர் சமூகம் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் அவர்கள் கல்வி கற்று ஆசிரியராகப் பணிபுரிந்தாலும் தாய் தந்தையர் வசிக்கின்ற தோட்டக் குடியிருப்புகளில் வசிக்கின்ற நிலைமை இருக்கின்றது. இவை காலப்போக்கில் பொருத்தமானதாக இருக்காது. ஆசிரியர்கள் தனி மனிதன் அல்ல. அவர்கள் மனைவி, பிள்ளைகள் என்று குடும்பமாக வாழ்கின்ற மாற்றம் ஏற்படும் போது தோட்டக்குடியிருப்புகளில் வாழ்வது பொருத்தமாக இருக்காது.
பெருந்தோட்டப் பிரதேசத்திலிருந்து ஆசிரியர்களாகப் பணிபுரிகின்றவர்களுக்கு வீடமைப்பு அதிகார சபையின் மூலமாக அரசாங்கம் வீடமைப்புத் திட்டமொன்றை ஏற்படுத்தி அதனை அவர்களுக்கு சொந்தமாக்க வேண்டும்.
சம்பள முரண்பாடும் சம்பளப் பாக்கியும் ஆசிரியர்கள் நியமனத்தின் போது முரண்பாடும், ஏற்றத்தாழ்வும் உள்ள சம்பளம் வழங்கப்படுகின்றது. நீண்டகாலமாக இந்த ஆசிரியர்களின் சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திடம் வலியுறுத்தியும் இந்த முரண்பாடு இன்றுவரை தீர்க்கப்படவில்லை.
ஒரே தொழில் செய்யும் ஆசிரியர்கள் சம்பளம் 2007 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனத்தின் வழங்கப்படுகின்ற சம்பளத்திற்கும் ஏற்கனவே ஆசிரியராகப் பணிபுரிகின்ற ஆசிரியர்களின் சம்பளத்திற்கும் பாரிய முரண்பாடு இருக்கின்றது.
இந்த சம்பள முரண்பாட்டையும், சம்பளத்தில் வழங்க வேண்டிய மிகுதிச் சம்பளத்தையும் வழங்காமல் காலத்தைக் கடத்துவதால் பாரிய கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். சம்பளத்தில் உள்ள முரண்பாட்டை அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் சம்பள உயர்வை வழங்க வேண்டும். அதேபோன்று சம்பளத்தில் வழங்கப்படாமல் இருக்கும் பாக்கிச் சம்பளத்தையும் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்களை முன்வைத்துள்ளது.