* யாழ்.அரச அதிபர் கே.கணேஷ்
யாழ். குடாநாட்டு தீவுப் பகுதியில் குறிப்பாக நெடுந்தீவில் கடற்றொழிலாளர்கள் தாம் கடலில் பிடித்த கடலுணவுப் பொருட்களை சந்தைப்படுத்துவதில் இதுவரை காலமும் எதிர்நோக்கிய பல்வேறு கஷ்டங்கள் 68 இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு புதிதாக வழங்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட பைபர் கிளாஸ் படகின் மூலம் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ். மாவட்ட மக்களுக்கு போதிய கடலுணவுப் பொருட்கள் கிடைப்பதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது. இவ்வாறு யாழ். அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை புங்குடுதீவு குறிகட்டுவான் இறங்குதுறையில் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தால் வழங்கப்பட்ட குளிரூட்டிய மீன்பிடிப்படகை நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்க சமாஜப் பிரமுகர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அரச அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ். மாவட்ட கடல் நீரியல் மற்றும் கடற்றொழில் உதவி ஆணையாளர் எஸ்.தர்மலிங்கம் இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். கடற்படையினரால் கொழும்பில் இருந்து எடுத்துவரப்பட்ட இப்படகை, காரைநகர் கடற்படை கட்டளை அதிகாரி ஏ.சமணவீர யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். அரச அதிபர் இப்படகை நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் என்.திருலிங்கநாதனிடம் கையளித்து படகிற்கான உரிமங்களை நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்திடம் வழங்கினார். இப்படகு பின் வெள்ளோட்டமாக முதலில் நயினாதீவு ஷ்ரீ நாகபூசணியம்மன் ஆலயத்துக்கும் பின்னர் நெடுத்தீவு, அனலைதீவு, எழுவைதீவு இறங்குதுறைகளுக்கும் பத்திரிகையாளர் ஒரு சிலருடனும் தனது வெள்ளோட்டத்தை நடத்தியது. இந்நிகழ்வில் செய்தி சேகரிக்கச் சென்ற உள்ளூர் பத்திரிகையாளர்களுக்கு குறிகட்டுவான் இறங்குதுறையில் சேவையில் இருந்த கடற்படை அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.
இவ்வைபவத்தில் யாழ். மாவட்ட அதிபர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; "சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகின்றன. தீவுப் பகுதியில் குறிப்பாக நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் தமது கடலில் பிடிக்கப்படும் கடலுணவுப் பொருட்களை எடுத்துவந்து சந்தைப்படுத்துவதில் எதிர்கொண்ட பல கஷ்டங்கள் புதிதாக வழங்கப்பட்டிருக்கும் குளிரூட்டிப் படகு மூலம் தீர்க்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையில் நெடுந்தீவில் வாழும் 1,500க்கும் அதிகமான கடற்றொழிலாளர்களின் வருமான மேம்பாட்டுக்கு வளம் கிடைத்திருப்பதுடன், அவர்களது குடும்பத்தில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான சிறார்களின் நல்வாழ்வுக்கும் சிறுவர் பாதுகாப்பு நிதியம் வழி செய்து கொடுத்துள்ளது.
யாழ். மாவட்டத்துக்கு கடற் கலங்களை பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டே எடுத்து வர முடியும். கடந்த வருடமே இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கொழும்பு டொக்யாட் நிறுவனத்தில் இப்படகு வடிவமைக்கப்பட்டபோதும் இப்போது தான் அதனை எடுத்துவர முடிந்தது. இதனை நல்ல முறையில் பயன்படுத்தி கிடைக்கும் வசதிகள் அனைத்து கடற்றொழிலாளர்களும் பயனடையக் கூடியதாக நிர்வாகிகள் செயல்பட வேண்டும். குறிப்பாக, கடற்படையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே, உங்கள் வழமையான சேவைகள் அமைய வேண்டும்.
இப்படகில் சுமார் ஐந்து மெற்றிக் தொன் கடலுணவுப் பொருட்களை எடுத்துவர குளிரூட்டி கிடங்கு வசதி செய்யப்பட்டுள்ளது. நாற்பதடி நீளமான இந்த பைபர் கிளாஸ் படகை உங்கள் சொத்தாகப் பயன்படுத்தி வாழ்வில் புதிய முன்னேற்ற இலக்கை எட்டுமாறு இம்மக்களை வாழ்த்துகின்றேன் என்றார்.
யாழ். மாவட்ட கடல் நீரியல் மற்றும் கடற்றொழில் உதவி ஆணையாளர் எஸ்.தர்மலிங்கம் அங்கு உரையாற்றுகையில், சிறுவர் பாதுகாப்பு நிதியம் இன்று வழங்கும் குளிரூட்டியுடன் கூடிய படகு, நெடுந்தீவு பிராந்தியத்தின் கடற்றொழிலாளர்களின் சுபிட்சமான வாழ்வை வளப்படுத்த உதவும் பாரிய உதவியாகும். இப்பிரதேச கடற்றொழிலாளர்கள் நீண்டகாலமாக தாம் கடலில் பிடிக்கும் கடல் உணவுப் பொருட்களை பழுதடையாமல் நல்ல விலைக்கு சந்தைப்படுத்த முடியாமல் அவலங்களை சந்தித்து வந்தனர். இந்நிலையை மாற்றியமைக்க சிறுவர் நிதியம் எடுத்த முயற்சியின் பயனாக இப்பிரதேச கடற்றொழிலாளர்களின் வாழ்வில் வசந்தம் உருவாகியுள்ளதாகக் கூறினார்.
வைபவத்தில் யாழ். மாவட்ட சிறுவர் பாதுகாப்பு நிதிய முகாமையாளர் விக்ரர் மொசஸ், பிராந்திய இணைப்பாளர் எஸ்.மகேந்திரன், கடல் நீரியல் வள திட்ட அதிகாரி கலிங்ஸ்ரன், யாழ். மாவட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இப்படகுச் சேவை தினமும் நெடுந்தீவு இறங்குதுறை, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு இறங்குதுறைகளுக்கு சென்று கடற்றொழிலாளர்களின் உணவுப் பொருட்களை எடுத்து வந்து குறிகட்டுவான் இறங்குதுறையில் ஒப்படைக்கும்.