தோட்டத் தொழிலாளர்கள் உரிமையுடன் வாழுகின்ற சூழலை ஏற்படுத்துவதற்கு மலையகத்தின் பல்வேறு அரசியல் சக்திகளுடன் இணைந்து கூட்டாகக் குரல் கொடுப்பதற்கு இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக முன்னணியின் உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மேதினத்தினை முன்னிட்டு பொகவந்தலாவை பெற்றசோ தோட்ட கிறிஸ்தவ ஆலயத்திலும், மோறார் தோட்ட ஷ்ரீ முத்துமாரியம்மன் கோவிலிலும் இடம்பெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டு பேசிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;
இன்று அமைச்சராக, பிரதியமைச்சராக, மாகாணசபை அமைச்சராக இருந்துவிட்டால் தொழிற்சங்கமொன்றை அமைத்து செயற்படலாமென்றதொரு நம்பிக்கை மலையக அரசியல்வாதிகளிடையே ஏற்பட்டுள்ளது.
ஆனால், இ.தொ.ஐ. முன்னணி தொழிற்சங்க ரீதியிலான தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழிவகைகளுக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் சிறப்பானதொரு தொழிற்சங்க கட்டமைப்பை உருவாக்குவதில் பெரும் வெற்றியைக் கண்டுள்ளது.
தமது அங்கத்தவர்களுக்கு சீமெந்து மூடைகளையும் கூரைத் தகரங்களையும் நாற்காலி, மேசைகளை வழங்குவதன் மூலம் சில தொழிற்சங்கங்கள் தற்காலிக சுகத்தை அனுபவிக்கின்றன.
எமது மக்களை இதற்கெல்லாம் கையேந்த வைத்தாலே இந்தத் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்ய முடியும். ஆனால், இ.தொ.ஐ. முன்னணி தொழிலாளர் வர்க்கம் கையேந்துவதற்கும் அற்பசொற்ப சலுகைகளுக்காக ஏங்கி நிற்பதற்கும் முற்றுப்புள்ளி வைத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலம் கௌரவமாக தமது தேவைகளை அவர்களே பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்ற யதார்த்தமான கொள்கையுடன் செயற்பட்டு வருகின்றது.
அதனால் தான் தொழிலாளர்களின் நலன்கருதி கூட்டொப்பந்தத்துக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளோம்.
நுவரெலியா மாவட்டத்தில் 80 ஆயிரம் பேர் வாக்காளர் இடாப்பில் பதியப்படாதிருந்த விடயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தோம்.
மேலும், நுவரெலியா மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் தமிழ் வாக்காளர்கள் திட்டமிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றார்கள் என்ற சதித் திட்டத்தைப் பகிரங்கப்படுத்தினோம். அத்துடன், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட நுவரெலியா மாவட்டத் தமிழ் வாக்காளர் பெயர்களை மீண்டும் பதியச் செய்வதற்கு நட்பு சக்திகளின் அனுசரணையுடன் நடவடிக்கை எடுத்தோம்.
மலையகத்தில் எமது சேவைகளை விரிவுபடுத்தி குறுகிய காலத்தில் அதிகளவான சேவைகளை செய்ய வேண்டியுள்ளது. மலையகத்தில் 60 வருடம், 20 வருடம் வரலாறுகளைக் கொண்ட கட்சிகள், தொழிற்சங்கங்கள் சமூகத்தை சரியான முறையில் வழிநடத்தத் தவறிவிட்டதன் காரணமாக மக்கள் புதிய அரசியல் தலைமைத்துவத்தின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். நாம் மலையகத்தில் பல்வேறு தொழிற்சங்க, சமூகசேவை சக்திகளை ஒன்றிணைத்து பலம் பொருந்திய அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்கும் முயற்சியை ஆரம்பித்திருக்கிறோம். தற்போது அது சாத்தியமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.