* கட்டார் அறிஞர் தீன்முஹம்மத் அறிவுரை
முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களைப் பற்றி ஒற்றுமையுடன் வாழ்வதன் மூலம் உலகுக்கு முன்மாதிரியைக்காட்ட முடியுமெனத் தெரிவித்திருக்கும் கட்டார் (ஷரீஆ) இஸ்லாமிய பல்கலைக்கழக உபவேந்தர் தீன்முஹம்மத், தரீக்காக்கள் முஸ்லிம் சமுகத்தை சீரான பாதையில் இட்டுச்செல்ல உருவாக்கப்பட்டனவேயொழிய சமூகத்தைப் பிளவுபடுத்தும் நோக்குடன் வரவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
`திக்ர்' எனும் இறைபக்தி முஸ்லிம்களிடம் மேலோங்கினால் நாம் எதிர்கொண்டிருக்கும் அனைத்துச் சவால்களையும் வெற்றிகொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு உம்முஸ்ஸாவியாவில் நடைபெற்றுவரும் ஷாதுலியா தரீக்காவின் தேசிய மாநாட்டின் இரண்டாம் நிகழ்ச்சியில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு பேசுகையிலேயே உபவேந்தர் தீன்முஹம்மத் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;
ஷாதுலியா தரீக்காவின் இஃவான்கள் எப்போதும் ஒழுக்கம், மரியாதை, பண்பாடுகளில் கரிசனையுடையவர்கள். அதனால் தான் அந்தத் தரீக்காவின் வளர்ச்சி மென்மேலும் வளர்ந்தோங்கி அனைத்து இளைஞர்களையும் தன்பால் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இதற்காக நான் ஏனைய தரீக்காக்களை குறை கூறவில்லை. தரீக்காக்களுள் முதலிடத்தை ஷாதுலியா தரீக் வகித்துக் கொண்டிருக்கிறது. என்பதை இங்கு கூறிவைக்க விரும்புகிறேன்.
ஸூபியாக்கள், கலீபாக்கள் தரீக்காவின் வளர்ச்சிக்காக பெரும் பாடுபட்டவர்கள் இறைநேசச் செல்வர்கள் எவ்வாறு இஸ்லாத்துக்குச் சேவை செய்தார்களோ அதனையே ஷாதுலியா கலீபாக்களும் அர்ப்பணிப்புடன் தீன்பணி செய்து வருகின்றனர்.
இங்கு நான் ஒருவிடயத்தை மீண்டும் கூற விரும்புகிறேன். தரீக்காக்கள் பல இருக்கின்றன. அவைகள் அனைத்தும் ஒற்றுமைப்படவேண்டும். தரீக்காக்களின் ஐக்கியமே தரீக் காக்களை சீர்குலைக்கத் திட்டமிடுவோருக்கு கொடுக்கப்படும் சாட்டை அடியாகும்.
நாங்கள் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டும் இதனை தரீக்காக்கள் சிறப்புடன் செய்வதற்கு வழி காட்டுகின்றன.
தரீக்காக்கள் இல்லாது போனால் இஸ்லாமே இருக்காது. இதனைத் துணிந்து கூறலாம். இஸ்லாம் என்றால் என்ன? உண்மையான முஸ்லிம் என்பவன் யார்? அல்லா தன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்பதை நினைத்து அவனை வணங்குவதாகும். நபிகள் நாயகம் (ஸல்) முன்னிலையில் அன்றைய நபித் தோழர்கள் எவ்வளவு பணிவாக பண்பாக இருந்தார்கள் என்பதை நாம் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும்.
கந்தூரி மௌலூத் ஓதினாலும், பாத்திஹா ஓதினாலும் அங்கே அல்லாஹ்வின் திக்ரும் நபிகள் நாயகத்தின் மீது ஸலவாத்துமே சொல்லப்படுகிறது. நாயகத்தின் மீது ஸலவாத்துச் சொல்லாதவன் சுவர்க்கம் செல்லமாட்டான். அதேபோல் அல்லாஹ்வும் அவனை வெறுக்கின்றான். ஏனெனில் நபிகள் நாயகத்தின் மீது நானும் ஸலவாத்துச் சொல்கிறேன். மனிதர்களே நீங்களும் ஸலவாத்துச் சொல்லுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான் எனத் தெரிவித்தார்.
தமிழ் நாடு முஸ்லிம் லீக் உபதலைவர் கலாநிதி அப்ளல் ஹூஸைன் பேசும்போது கூறியதாவது;
நாங்கள் எமக்கு உதவி செய்பவர்களுக்கு நன்றி கூறவேண்டும். அவ்வாறு செய்யாது போனால் நன்றி கெட்டவர்களாக மாறிவிடுவோம். அதேபோல் எம்மைப் படைத்துப் பராமரித்து எமக்கு உதவி புரியும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்காது போனால் எம்மைப் போல் துரதிர்ஷ்டம் பிடித்த மனிதர்கள் பாவிகள் இருக்கவே முடியாது.
இதனால் தான் எங்கள் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) இறைவனுக்கு `ஷுக்கூர்' என்ற நன்றியைத் தெரிவித்துக் கொண்டேயிருந்தார்கள். இறைவன் செய்யும் அருளுக்கு அவனுக்கு நன்றியறிதலுள்ளவனாக இருக்க வேண்டாமா என்று நபி பெருமானார்கள் அடிக்கடி கேட்பார்கள்.