* நாவிதன்வெளி கூட்டத்தில் ஹசனலி
இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகத்தான் தலைவர் ரவூப் ஹக்கீமும், தவிசாளர் பஷீர் சேகுதாவுதும், நானும் பதவிகளைத் தூக்கிவீசி விட்டு தேர்தல் களத்தில் வேட்பாளர்களாக நிற்கின்றோம்.
நாவிதன்வெளியில் ஏ.சி.நிசார் தலைமையில் பெருந்திரளான மக்கள் மத்தியில் அம்பாறை மாவட்ட ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதன்மை வேட்பாளரும், கட்சியின் செயலாளருமான எம்.ரி.ஹசனலி உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்;
இது ஒரு திணிக்கப்பட்ட தேர்தலாகும். இந்தத் தேர்தல் வருமென்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்குரிய ஒரு முஸ்லிம் மாகாணசபையைத் தந்து விட்டுத்தான் கடும்போக்கு பேரினவாதிகள் இந்தத் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும்.
தமிழ் சகோதரர்களையும், முஸ்லிம்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறது பேரினவாதம்.
இந்த மண்ணை மீட்டெடுப்பதற்கும், எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கும் தமிழ்பேசும் மக்கள் ஒன்றுபட்டு இந்தத் தேர்தலை வென்றெடுக்க வேண்டும். இந்த தேர்தலில் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வென்று விடுமானால் ஒரு முஸ்லிம் மாகாணசபை முஸ்லிம்களுக்குக் கிடைப்பதையும், தமிழர்களுக்குச் சுயாட்சி கிடைத்துவிடுவதையும் யாராலும் தடுக்க முடியாது என்றும் ஆகவே ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைத் தோற்கடித்து விடவேண்டுமென்றும் அரச உயர் மட்டம் கூறியிருக்கிறது.
தமிழ் பேசுகின்ற மக்களாகிய நீங்கள் எமது உரிமைகளைப் பெறுவதற்கும், எமது அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கும் இந்தத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும். ஒரு பிரகாசமான வரலாறைப்படைத்து விடுவதற்கான இச்சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி பேரினவாத கடும் போக்காளர்களைத் தோற்கடிக்க வேண்டும்.
இவர்கள் நடத்தப்போகின்ற அநியாயத்திலிருந்து உங்களை நீங்கள் பாதுகாக்க வேண்டும். அதற்கான ஆயுதம் உங்கள் வாக்குகள் தான்.
உங்கள் வாக்குகளால் நீதியையும், தர்மத்தையும் நிலைநிறுத்தப் போகின்றீர்களா? அல்லது அதர்மத்தையும், அநீதிகளையும் அங்கீகரிக்கப் போகின்றீர்களா? நன்றாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய நேரமிது.
பேரினவாத கடும் போக்குக் கட்சிகளின் கூட்டணியாகிய மக்கள் ஐக்கிய சுதந்திரமுன்னணி, ஜே.வி.பி., ஹெல உருமய ஒருபக்கம். மறுபக்கம் அகிம்சையையும், சமாதானத்தையும் நேசிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி, ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இந்த இரண்டு அணிகளுக்குமிடையில் நடைபெறுகின்ற தேர்தல் யுத்தத்திலே ஐ.தே.கட்சியின் யானைச்சின்னத்தில் போட்டியிடுகின்ற ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றி உறுதியாகிவிட்ட விடயமாகும்.
எமது தமிழையும், தமிழ்பேசும் மக்களின் குரலையும் நீங்கள் மாகாண சபையில் ஒலிக்கச் செய்ய வேண்டும். பேரினவாதிகளின் ஒரு பொம்மையை நீங்கள் நிராகரிப்பதன் மூலம் ஜனநாயகத்தைக் கிழக்கு மண்ணில் நீங்கள் தோற்றுவிக்கலாம்.
எங்கள் அடையாளத்தையும், இருப்பையும் தக்கவைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் பேசும் மக்கள் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவாக அணிதிரளவேண்டும். அகிம்சைப் புரட்சியால் எமது மண்ணை நாம் காப்பாற்ற வேண்டும். பாதுகாக்க வேண்டும் ஒரு மாபெரும் வரலாற்றுத் தவறு நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்க வேண்டும்.
இந்த நாட்டிலே வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்களுக்கு அதிகார அலகுடன் கூடிய பிரதேசங்கள் பிரித்துக் கொடுக்கக் கூடாது என்பதில் பேரினவாதக் கடும் போக்காளர்கள் கடைப்பிடித்து வருகின்ற கொள்கையாகும். இந்தக் கொள்கையை முறியடிப்பதற்கு இந்தத் தேர்தலை ஒரு ஆயுதமாக பலமிக்க சக்தியாகப் பயன்படுத்த வேண்டும். தமிழ் பேசும் மக்கள் தாயகக் கோட்பாட்டைக் கைவிட வேண்டும் என்றும், சிறுபான்மை தொடர்ந்தும் கீழ்நிலைப்பட வேண்டும் என்றும் பேரினவாதம் கூறிவருகிறது.
ஆகவே; இந்த தேர்தல் சர்வஜன வாக்கெடுப்புக்கு நிகரானது. இந்தத் தேர்தலின் முடிவுகளை அறிவதற்காக சர்வதேசம் காத்திருக்கிறது. பேரினவாத கடும்போக்காளர்களின் உண்மைத் தன்மையில்லாத பொய் வேசங்களை இந்த உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.