ஈழத்தில் தமிழ் மொழிவளர்ச்சிக்கும் தமிழ்ப் பாரம்பரிய உயர்ச்சிக்கும் நாட்டார் வழக்கியல் விருத்திக்கும் அரும் பாடுபட்ட பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தனின் 84 ஆவது நினைவுக் கருத்தாடல் நிகழ்வுகள் எதிர்வரும் 8 ஆம் திகதி அவரது பிறந்ததினத்தில் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் சமகால நிகழ்வுகளாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பேராசிரியர் எஸ்.சிவலிங்கம்ராசா தலைமையில் யாழ். பல்லைக்கழகத்திலும், பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலும் இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கனின் வாழ்த்துரையும் யாழ்.பல்கலைக்கழக கலாநிதி கலாமணியின் இசைநாடகம் "நேற்று, இன்று, நாளை" என்ற தலைப்பிலான நினைவுரையும் யாழ்.பல்கலைக்கழக மாணவரின் "காத்தவராயன் கூத்தும்" இடம்பெறவுள்ளது.
விழா ஏற்பாடுகளை அறக்கட்டளையின் இணைப்பாளர் கலாநிதி தி.விசாகரூபன் மேற்கொண்டு வருகின்றார்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் வரவேற்புரையை அகவிழி ஆசிரியர் தெ.மதுசூதனன் நிகழ்த்துகின்றார். கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கும் பொறுப்பான பிரதம ஆணையாளர் கே.முகமட்தம்பி நினைவுரை நிகழ்த்தவுள்ளார்.
பேராசிரியர் சு.நித்தியானந்தனின் "இலக்கியத் தென்றல்" எனும் நூல் மீள்பதிப்பாக வெளியிடப்படுகின்றது. வெளியீட்டுரையை பேராசிரியர் சுபா ஜெயராசா நிகழ்த்துகின்றார். மற்றும் கொழும்பு இராமநாதன் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சியும், கஜந்தப்பா குழுவினரின் நாட்டார் பாடல் இசை நிகழ்வும் நடைபெற ஏற்பாடாகியுளளது. விழா ஏற்பாடுகளை நினைவுக்குழுவின் இணைச் செயலாளர் கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் மேற்கொண்டு வருகின்றார்.