விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தி நித்தம்புவ, திஹாரி பஸ்ஸியான பகுதியில் வர்த்தகர்களை மிரட்டி பெருமளவு பணத்தை கப்பமாகப் பெற்று வந்த கும்பலொன்றைச் சேர்ந்த இருவரை மேல்மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
புலிகள் இயக்கத்தினர் எனக்கூறி தமிழில் உரையாடி இவர்கள் கப்பம் பெற்று வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரு வாரங்களில் திஹாரியை சேர்ந்த வியாபாரியொருவரிடம் 20 இலட்சம் ரூபாவும் டுபாயிலுள்ள இலங்கை வியாபாரி ஒருவரிடமிருந்து 2 கோடி ரூபாவும் கப்பம் கேட்டது தொடர்பாக புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பஸ்ஸியால பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கப்பத் தொகையை குறைக்குமாறு கோரி வியாபாரிகளை போல் வேடமணிந்து சென்ற இவர்கள் கள்எலியாவில் கப்பம் பெறும் இருவரைச் சந்தித்ததுடன், உடனடியாக அவர்களை கைதுசெய்து நித்தம்புவ பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இவர்களிருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கப்பம் பெற்றது தொடர்பான பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கப்பம் பெறுவதற்காக பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண்ணும் கப்பத் தொகையை வைப்பிலிடுமாறு கூறி கொழும்பு தனியார் வங்கியொன்றில் ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கும் போலி அடையாள அட்டையை காண்பித்து பெறப்பட்டதெனத் தெரியவந்துள்ளது.
இந்த வங்கிக் கணக்கினூடாக பெருந்தொகை பணம் கைமாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்கள் இருவரும் கள்எலியாவை சேர்ந்தவர்கள் என்றும் கப்பம் பெறப்பட்ட வியாபாரிகள் அனைவரும் முஸ்லிம் வியாபாரிகள் எனவும் தெரியவந்துள்ளது. இக்கும்பலில் தலைமறைவாக உள்ள ஏனையோரை கைது செய்வதற்கு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.