* பொலிஸ் மா அதிபர் விசனம்
எம்.ஏ.எம்.நிலாம்
பொலிஸ் திணைக்களத்தின்மீது அவதூறு கற்பிக்கும் விதத்திலும் திணைக்களத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்கு சில ஊடகங்கள் முயற்சிப்பதாகக் கண்டனம் தெரிவித்த பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா, ஊடகங்கள் தகவல்களை திரித்துக் கூறாமல் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
சிங்கள நாளிதழொன்றின் ஆசிரியத் தலையங்கத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரியொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை விமர்சித்து அந்த அதிகாரிக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பொலிஸ் திணைக்களத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டதாகவும் இது முற்றிலும் பொய்யானதும் நிராகரிக்கக்கூடியதெனவும் விக்டர் பெரேரா தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு கூறினார்.
பொலிஸ் துறையிலுள்ளவர்களும் மனிதர்கள்தான். தவறுகள் இடம்பெறுவதில்லை என நாம் கூற முற்படவில்லை. அது மனித சுபாவம். ஆனால், ஒருசிலர் செய்யும் தவறுக்காக முழுப் பொலிஸ் திணைக்களத்தின் மீதும் குற்றம் சுமத்த முற்படக்கூடாது.
அதேசமயம், சில ஊடகங்களின் நடவடிக்கைகளால் பயங்கரவாதிகளே பயனடையும் நிலை ஏற்படுகின்றது. இவ்வாறு நடந்துகொள்வதை ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட அந்த சிங்கள நாளிதழ் தனது தவறை திருத்தி செய்தி எழுதத் தவறினால் அதன் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா தெரிவித்தார்.