* மட்டக்களப்பில் ஜெயலத் ஜெயவர்த்தன எம்.பி.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் உக்கிரமடைந்துள்ள இவ்வேளையில், மட்டக்களப்பு நகரத்தின் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் பிரசார கூட்டத்தின்போது விசேட உரையாற்றிய டாக்டர் ஜயலத், தமிழ் பேசும் மக்களின் உரிமை, கௌரவம், சுதந்திரம் பாதுகாக்கப்படல் வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்;
பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த 1994 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை யுத்தத்தால் அல்லலுறும் வடக்கு, கிழக்கு மக்களின் தேவைகளையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளேன்.
அத்துடன், தெற்கின் சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரானபோதும் யுத்தத்தால் பாதிப்புற்ற மக்களின் தேவைகளை அறிந்து அம்மக்களிடம் சென்று அவர்களது மனித உரிமைகளையும் தேவைகளையும் பாதுகாக்க செயற்பட்டதோடு, பல வைத்திய முகாம்கள் நடத்தி பல சமூக சேவை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளேன்.
மேலும், தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கடத்தல், கப்பம் பெறுதல் போன்ற அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய, சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு முறையிட்டுள்ளேன்.
உண்மையாகவே தமிழ் மக்களில் அன்பும் அக்கறையும் கொண்டுள்ளதோடு தொடர்ந்து அந்நிலையிலேயே செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே சரியான வழியென்றும் யுத்தம் அதற்கான தீர்வில்லை. தமிழ் மக்கள் இந்நாட்டின் இரண்டாம் தர பிரஜைகள் அல்ல, அவர்களும் இந்நாட்டின் சமவுரிமையை பெற்றவர்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இணைப்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவினால் தான் தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு, அப்பிரசார நடவடிக்கைகளுக்கு என்னுடன் இன்னும் பல பிரதேச சபை, நகர சபை உறுப்பினர்களும் இணைந்து செயற்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.