வலிகாமம் வடக்கில் அதி உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை அங்கு உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்கு அடுத்த இரு வாரத்திற்குள் ஏற்பாட்டுக் குழுவை நியமிக்குமாறு உயர்நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
வலி.வடக்கு அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் மீளக்குடியமரவும் தொழில் முயற்சியில் ஈடுபடவும் அனுமதிக்குமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் விவசாயியான காசிப்பிள்ளை யோகேஸ்வரன் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மற்றும் நீதியரசர்களான பாலபட்ட பெந்தி, சோமவன்ச ஆகியோரைக் கொண்ட குழாம் இவ்வாறு உத்தரவிட்டது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், யாழ். அரச அதிபர் கே.கணேஷ் மற்றும் யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி ஆகியோரால் நியமிக்கப்படும் மூவரைக் கொண்ட குழுவை அடுத்த இரு வாரத்தினுள் நியமித்து இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்துமாறு சட்ட மா அதிபரை உயர்நீதிமன்றம் பணித்துள்ளது.
மனுதாரர்களை மாவை சேனாதிராஜா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகஈஸ்வரன் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், வீ.எஸ்.கணேசலிங்கம் ஆகியோரும் விவசாயியான காசிப்பிள்ளை யோகேஸ்வரன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சட்டத்தரணி தனபாலசிங்கம் ஜனகனுடன் ஆஜராகினர். சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சவீந்திர பெர்னாண்டோ ஆஜராகினார்.
மேற்படி ஏற்பாட்டுக்குழு நியமிக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக இவ்வழக்கை இம்மாதம் 28 ஆம் திகதி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.