* நீதிமன்றில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்
பாராளுமன்ற உறுப்பினர் ரி.மகேஸ்வரனின் கொலையுடன் முதலாவது சந்தேக நபருக்கு நேரடித் தொடர்பிருப்பது மரபணு பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக, நீதிமன்றத்துக்கு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அநுர சேனநாயக்க தெரிவித்தார்.
மேற்படி கொலைச் சந்தேக நபர்களை நேற்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்செய்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன், இணையத்தளம் ஒன்றில் வெளியான தகவலை அடிப்படையாகக் கொண்டே பி.பி.சி. செய்தி சேவைக்கு பாதுகாப்பு பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தனது கருத்தை வெளியிட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தக் கொலை தொடர்பான விசாரணை அறிக்கைகள் யாவும் சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இரண்டாவது கொலைச் சந்தேகநபருக்கு கொலையுடன் நேரடித் தொடர்புகள் எதுவுமில்லையெனவும் நீதிமன்றத்துக்கு தெரிவித்தார்.