எகலியகொடை பள்ளியவத்தை தனியார் தோட்டத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையும், ஆட்டோ உரிமையாளருமான தமிழ் குடும்பஸ்தரொருவரை கடந்த 28 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் காணவில்லையென எகலியகொடை பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அந்தனி ஜோர்ஜ் (வயது 29) என்பவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக அவரது உறவினர் இ.தொகா.காரியாலயத்திலும் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ தினத்தன்று காலை 8 மணிக்கு எகலியகொடை எமிங்போர்ட் தோட்டத்திலிருந்து அவசர நோயாளி ஒருவரை, உறவினர்களுடன் எகலியகொடை அரச வைத்தியசாலைக்கு அழைத்து வந்துள்ளார்.
நோயாளியை வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு உறவினர்கள் நோயாளிக்கு தேவையான உடுதுணிகளை எடுத்து வர வைத்தியசாலையின் முன்றிலில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கரவண்டியை நோக்கிச் சென்றபோது அங்கு அந்த வண்டியையும் உரிமையாளரையும் காணவில்லை.
அங்குள்ள பலரிடம் விசாரித்தும் தேடியும் பார்த்த போது முச்சக்கரவண்டியையும் அதன் உரிமையாளரையும் காணவில்லை.
இதன் பின்னர் இது குறித்து எகலியகொடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதனை தொடர்ந்து பொலிஸாரின் தீவிர தேடுதலின் பின்னர் முச்சக்கரவண்டி, கடந்த முதலாம் திகதி, இரத்தினபுரி அவிசாவளை பிரதான வீதியில் மொரகல்ல எனுமிடத்தில் அநாதரவாக கிடந்த நிலையில் மீட்கப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை எகலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.