ரொஷான் நாகலிங்கம்
ஜே.வி.பி.யின் பாராளுமன்ற குழுத் தலைவர் நியமனம் தொடர்பான முடிவுகளை கட்சியின் மத்திய குழு கூடி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக அநுரகுமார திஸநாயக்க எம்.பி. தெரிவித்ததுடன், கட்சியானது பீதியால் இந்நியமனத்தை இழுத்தடிக்கவில்லையெனவும் தெரிவித்தார்.
கொழும்பு தேசிய நூலகத்தில் நேற்று திங்கட்கிழமை ஜே.வி.பி. நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;
கடந்த 2-1/2 வருட காலப் பகுதியிலேயே நாட்டில் ஜனநாயக விரோதச் செயல்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளது. 17 ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் அரசியலமைப்புப் பேரவையை ஜனாதிபதி நியமிக்காது பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகத்தை நியமித்ததன் மூலம் ஜனாதிபதியே அரசியலமைப்பை முதலாவதாக மீறியுள்ளார்.
தேர்தல் மோசடி முதல் அரசின் இலஞ்ச ஊழல் மோசடிகளை தடுக்க வேண்டுமாயின் சுயாதீன குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாது தேர்தல் மோசடிகளை கண்காணிக்க வெளிநாட்டுக் குழு வருவதாக அரசு கூறுவது வெறும் கண்துடைப்பாகும்.
அக்குழுவினர் தேர்தல் நடைபெறும் இடங்களில் இரு தடவை சுற்றிவிட்டு தேர்தல் குறித்த அறிக்கையை மாத்திரமே வெளியிடுவர். அவர்களுக்கு தேர்தல் வாக்குச் சீட்டின் நிறம் எது என்று தெரியாமலே அறிக்கை விடுவதுடன், அறிக்கையில் தவறை சுட்டிக்காட்டி திருத்துமாறு கோருவர். இதனால் எதுவித பயனுமேற்படப் போவதில்லை. எனவே சிவில் குழுக்களை அமைக்குமாறு கோருகின்றோம். இதில் அனைத்து கட்சிகளும் பேதமின்றி இடம்பெறவேண்டும்.
அவர்களுக்கே வாக்குச் சாவடி முதல் வாக்குச் சீட்டு வரையான அனைத்து விடயங்களும் தெரிந்திருக்கும். எனவே அவர்களே மோசடிகளைத் தடுப்பர். உள்நாட்டு கண்காணிப்பு அமைப்புகள் கட்சி சார்ந்தவையாகும். ஜனாதிபதியை சந்தித்தால் அறிக்கை மாற்றப்பட்டுவிடும்.
எமது கட்சிக்குள் எல்லா மட்டத்திலும் நீதியுள்ளது. எந்த உறுப்பினருக்கும் ஒரே விதமான உரிமைகள் உள்ளன. இந்நிலையில் எமது கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் நியமனத்தை பயத்தின் காரணமாக நாம் இழுத்தடிக்கவில்லை. இது குறித்து எமது கட்சியின் மத்திய குழு கூடி முடிவெடுக்கும். பயம் ஏற்பட்டாலேயே பதற்றம் ஏற்படும். எமக்கு இந்நியமனம் குறித்து பதற்றம் இன்மையாலேயே நிதானமாக இருக்கிறோம்.