* பரபரப்பான சூழ்நிலையில் இன்று சபை கூடுகிறது
பாராளுமன்ற பதில் செயலாளர் நியமனம் தொடர்பில் மீண்டும் தமது கடுமையான எதிர்ப்பை வெளிக்காட்டப்போவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி.யும் தெரிவித்துள்ள பரபரப்பான சூழ்நிலையில் இன்று பாராளுமன்றம் கூடுகிறது.
பாராளுமன்ற செயலாளர் நாயகமாக பணியாற்றிய பிரியாணி விஜேயசேகர ஓய்வு பெற்றதையடுத்து பதில் பாராளுமன்ற செயலாளராக கித்துல் கொட ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார்.
இந்நியமனத்திற்கு எதிர்க்கட்சிகள் தமது கடும் எதிர்ப்பை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியதையடுத்து கடந்த மாதம் சபை நடவடிக்கைகளும் பாதிப்படைந்தன.
அவசரகால சட்டத்தை மேலுமொரு மாத காலம் நீடிப்பதற்கான பிரேரணையை இலகுவில் நிறைவேற்றுவதற்காக கித்துல்கொட நியமனத்திற்கெதிரான போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.
இந்நிலையில், பாராளுமன்றம் மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை கூடவுள்ள நிலையிலேயே கித்துல்கொட நியமனத்திற்கெதிரான போராட்டம் தொடருமென ஐ.தே.க.வும், ஜே.வி.பி.யும் அறிவித்துள்ளன.
அரசியல் அமைப்பு சட்டவிதிகளின்படி பாராளுமன்ற செயலாளரை அரசியலமைப்பு பேரவையே நியமிக்கும். எனினும் பேரவை தற்போது செயற்படாமையால் பாராளுமன்ற செயலாளரை நியமிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
ஜனாதிபதி தனது தற்றுணிவு அதிகாரத்தின்படி பாராளுமன்ற பதில் செயலாளரை நியமிக்க முடியும். இந்நியமனமானது 14 நாட்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும். கடந்த மாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சர்ச்சைகளின்போதும் இதனையே சபாநாயகரும் சுட்டிக்காட்டியிருந்தார்.
கித்துல்கொடவின் 14 நாட்கள் பதவிக்காலம் ஏற்கனவே முடிந்துவிட்ட போதும், அவரை மீண்டும் பதில் செயலாளராக நியமிப்பது குறித்து ஜனாதிபதியிடமிருந்து எத்தகைய தகவல்களும் வெளியாகவில்லை.
கித்துல்கொட பதவியில் நீடித்தால் அவருக்கெதிரான போராட்டம் தவிர்க்க முடியாதென ஐ.தே.க.லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.யும் ஜே.வி.பி. விஜித ஹேரத் எம்.பி.யும் தெரிவித்தனர்.
இவ்விடயங்கள் குறித்து ஆராய சபாநாயகர் தலைமையில் இன்று முக்கிய கட்சித் தலைவர்கள் கூட்டமும் நடைபெறவுள்ளது.
அதேவேளை ஜே.வி.பி.யின் புதிய பாராளுமன்றக் குழுத் தலைவரும், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் இன்று முதல் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ள நிலையிலும் பாராளுமன்ற இன்றைய அமர்வு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.