மன்னார் பள்ளிக்குடா பகுதியில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை கடற்படையினரின் சோதனை நிலையமொன்றின் மீது தாங்கள் நடத்திய தாக்குதலில் 6 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலில் கடற்படைச் சிப்பாயொருவரது சடலத்தையும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்குடா கோந்தைப்பிட்டி பகுதியிலுள்ள இந்தத் கடற்படைச் சோதனை நிலையமூடாகவே மன்னார் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலை மீதே நேற்று அதிகாலை 2 மணியளவில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறுகையில்;
கோந்தைப்பிட்டியிலுள்ள கடற்படையினரின் சோதனை நிலையம் மீது நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூன்று கடற்படையினர் கொல்லப்பட்டனர். இதில் ஒருவரது சடலமும் பின்வரும் ஆயுதங்களும் கைப்பற்றபட்டன.
ஆர்.பி.ஜி -1. ஆர்.பி.ஜி. புறப்லர் -2, ஆர்.பி.ஜி.ஷெல் -06, ஏ.கே.எல்.எம்.ஜி. -1, அதற்குரிய ரம் ரவைகள் -05, கவச அங்கிகள் -02, தலைக்கவசம் -2, தொலைத் தொடர்புக் கருவி -1, 81 துப்பாக்கி ரவைகள் -4, நடுத்தர ரவைகள் -620 என்பனவே கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் கடற்படையினரின் முக்கிய தளங்களை நோக்கி ஒரே நேரத்தில் புலிகள் கடும் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேநேரம், மேற்படி பகுதியில் புலிகள் நடத்திய தாக்குதலை தாங்கள் முறியடித்துள்ளதாகவும் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் படையினர் தெரிவித்தனர்.