*ரணில் கடும் குற்றச்சாட்டு
வடக்கு, கிழக்கை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது இளைய சகோதரரான பசில் ராஜபக்ஷவிடம் கையளித்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு ஞாயிற்றுக்கிழமை உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, பசிலிடம் வட, கிழக்கு பிராந்தியத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தலைவராகக் கொண்ட வடக்கிற்கான விசேட செயலணிக் குழுவின் உறுப்பினராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பிராந்தியத் தலைவரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத் தரப்பில் போட்டியிடுகிறார். இவர் பசில் ராஜபக்ஷவின் நெருங்கிய சகாவென விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தெற்கை மூத்த சகோதரர் ஆட்சி செய்யும்போது வடக்கு, கிழக்கு அதிகாரங்களை படிப்படியாக பசில் ராஜபக்ஷ, ஹிஸ்புல்லா மற்றும் செயலணிக் குழு மூலம் கைப்பற்றி வருவதாக ரணில் கூறியுள்ளார்.
ஹிஸ்புல்லாவும் பிள்ளையானும் முதலமைச்சர் பதவிக்கு உரிமை கோருவது பற்றிக் குறிப்பிட்ட ரணில், இரவு வேளையில் ஹிஸ்புல்லா முதலமைச்சர் கடமையை மேற்கொள்வார் என்று கூறியுள்ளார்.
கிழக்கிற்கு இரு முதலமைச்சர்கள் தேவையென்றால் முதலமைச்சர் பிள்ளையானால் இரவில் வரமுடியாது என்றும் ரணில் விக்கிரமசிங்க கிண்டலாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
தேர்தல்களில் தோல்வி கண்டாலும் கூட தேசியப் பிரச்சினை தொடர்பான ஐ.தே.க. தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாது என்று உறுதிபடத் தெரிவித்த ரணில், தேசியப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலமே தீர்வு காண முடியும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.