* ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
கிழக்கில் வன்முறைகள் இடம்பெறுவதாக கொழும்பிலுள்ள சிலர் வதந்திகளை திரித்து விடுவதாகவும் சகல கட்சிகளுமே சுதந்திரமாக பிரசார நடவடிக்கைகளை கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற பெருந்தோட்டத் துறை முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ், த.ம.வி.பு. மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுவோர் இடையூறின்றி தமது பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அரசியல் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலில் தமது தோல்வி நிச்சயமென்பதால் எதிரணியினர் பல புகார்களை தெரிவிக்கின்றனர். ஆனால், மீண்டும் தமது வாழ்வை பயங்கரவாதத்திற்கு தியாகம் செய்ய மக்கள் தயாராக இல்லை. கிழக்கில் விவசாய அபிவிருத்தி பாரிய அளவில் மேற்கொள்ளப்படும்.
முழு உலகுமே உணவு நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளது. ஆனால், இலங்கை பாதிக்கப்படாது. ஒவ்வொரு துண்டு நிலத்தையும் பொது மக்கள் விவசாயச் செய்கைக்கு பயன்படுத்துவது அவசியம்.
தாய் நாட்டை ஒற்றையாட்சியின் கீழ் பாதுகாக்கும் பொறுப்பை மக்கள் ஒப்படைத்துள்ளனர். அதனை பயங்கரவாதத்திற்கு அரசு ஒரு போதும் கையளித்து விடாது.