* அரச தரப்பு வாக்கு மோசடிக்கு தயாராவதாக முறைப்பாடுகள்
** மு.கா., சுயாதீனத் தேர்தல் அமைப்பு குற்றச்சாட்டு
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பெரும் மோசடிக்கு தயாராகும் அரசாங்கமும் பங்காளிக் கட்சிகளும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளும் சுயாதீன தேர்தல் அமைப்புக்களும் ஆதாரங்களை முன்வைத்து குற்றம் சாட்டியுள்ளன.
இதுகுறித்து பல முறைப்பாடுகள் தமக்கு கிடைத்திருப்பதாக முஸ்லிம் காங்கிரஸும் மற்றும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமும் தெரிவித்தன. முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹஸன் அலி தமக்கு கிடைத்த முறைப்பாடுகள் குறித்து கூறுகையில்;
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே உள்ளிட்ட அவர் சார்ந்த கட்சி வேட்பாளர்களினால் தேர்தல் தொடர்பில் பல விடயங்கள் பலாத்காரமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சகல சமுர்த்தி உத்தியோகத்தரும் வெற்றிலைச் சின்னத்திற்கு ஆதரவளிப்பதுடன் போஸ்டர்கள் விநியோகிப்பதுடன் கட்சி அலுவலகங்களையும் திறக்க வேண்டும். இதற்கு கட்டுப்பட மறுப்பவர்கள் இடமாற்றப்படுவர். இல்லையேல் உணவு முத்திரை வெட்டப்படும்.
மரணித்த, வெளிநாடுகளில் உள்ள மற்றும் வேறு இடங்களில் உள்ளவர்களின் வாக்குகளை சேகரித்து வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்குப்போட வேண்டும்.
வாக்குச்சாவடிக்கு செல்வதற்காக சகல சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசாங்கமும் அதில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளும் மோசடி செய்து தவறான முறையில் கிழக்கு மாகாண அதிகாரத்தை பெற முயலுகின்றன. எனவே, இது குறித்து உடனடிக் கவனம் செலுத்த வேண்டுமென்றார்.
இதுபற்றி நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிடுகையில்;
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயுதக்குழுவொன்றும் அமைச்சரொருவரும் அதிகளவு அச்சுறுத்தல் தரும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
ஆயுதக்குழு இரவு நேரத்தில் வீடுகளுக்குச் சென்று அங்குள்ளவர்களை மிரட்டி வாக்காளர் அட்டைகளை அபகரிப்பதில் ஈடுபட்டுள்ளதுடன் இரவு நேரத்தில் பேருந்துகளில் பயணிப்பவர்களை இறக்கி அவர்களை வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிக்க வற்புறுத்தியுள்ளனர்.
இவ்வாறே அமைச்சரொருவர் எதிர்க்கட்சிகளின் கொடிகள், பதாகைகளை அறுத்து வீசி வருவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றார்.
1 இலட்சத்துக்கும் மேற்பட்ட வெற்று வாக்காளர் அட்டைகள் சாடுகிறது ஐ.தே.க.
எம்.ஏ.எம். நிலாம்
கிழக்கு மாகாண சபைத் தேர்லின் போது பாரியதொரு வாக்கு மோசடிக்கு அரசாங்கம் தயாராகி வருவதாகக் குற்றம் சாட்டியிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வெற்று வாக்காளர் அட்டைகள் பாதுகாப்பு அமைச்சின் உதவியுடன் கிழக்குக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.
வாக்காளிப்பு நீதியாகவும் சுதந்திரமாகவும் இடம்பெறுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தைத் தேர்தல் ஆணையாளரிடம் வலியுறுத்தியிருப்பதாகவும் ஐ.தே.க. தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.
இது குறித்து லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
"நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து கிடைத்த நம்பிக்கையான தகவலின் பிரகாரம் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலின் போது காலையிலேயே பெருந்தொகையான கள்ள வாக்குகள் போடப்படுவதற்கான முயற்சிகள் மிக இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் பட்டியலில் போட்டியிடும் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த பாரதி என்பவரின் வீட்டில் பெயர் விபரம் எதுவும் பதியப்படாத ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வெற்று வாக்காளர் அட்டைகள் கட்டுக்கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிட்டியுள்ளன. ஏற்கனவே, ஒரு இலட்சத்து எழுபதாயிரம் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாமல் தபால் நிலையங்களில் தேங்கிக் கிடப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் கடல்கோள் அனர்த்தத்தின் பின்னர் வீடுவாசல்களை இழந்து அகதிகளாக பெரும் எண்ணிக்கையான குடும்பங்கள் கிழக்கை விட்டும் வெளியேறியுள்ளனர். இவர்கள் இதுவரையில் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பவில்லை. வாக்காளர் இடாப்பிலுள்ள இவர்களின் பெயர் இலக்கங்களை அடையாளப்படுத்திக் கொண்டு மேற்படி வாக்காளர் அட்டைகளைப் பாவித்து கள்ள வாக்குப் போடுவதற்கான இரகசியத் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில் முழுக்க பாதுகாப்பு அமைச்சு இயங்கிக் கொண்டிருப்பதாக நம்பகரமாக தெரிய வந்துள்ளது.
அத்துடன், இவ்வாறு கள்ள வாக்குகளைப் போடுவதற்கு வசதியாக கிராம சேவையாளர்களைக் கொண்டு தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே, இந்த தற்காலிக அடையாள அட்டைகள் தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் நம்பகரமான தகவல்கள் கிட்டியுள்ளன.
மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதைத் தடுக்கும் பொருட்டு ஆயுதக் குழுக்கள் பெரும் அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றன. பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கம் உட்பட மூன்று ஆயுதக் குழுக்கள் தாராளமாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு பூரணமாகக் கிட்டுகின்றது.
கிழக்கில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மோசடிகள், வன்முறைகள், அச்சுறுத்தல்கள் குறித்து நேற்று திங்கட்கிழமை தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவைச் சந்தித்து முறைப்பாடு செய்துள்ளோம். நேர்மையானதும் நீதியானதுமான வாக்களிப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாம் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றோம்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் மட்டுமே ஆயுதமின்றிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பிள்ளையான் குழுவின் மூவாயிரம் பேர் ஆயுதபாணிகளாக கிழக்கில் காணப்படுகின்றனர். அரசாங்கத்தில் உள்ள சிலருக்கு பிள்ளையான் குழுவினரிடம் ஆயுதம் இருப்பது கண்களுக்குத் தெரியாமலிருப்பது புதுமையானதொன்றாகும்" எனவும், லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
வரலாற்றிலேயே மோசடி நிறைந்ததாக அமையும் எச்சரிக்கிறது ஜே.வி.பி.
ரொஷான் நாகலிங்கம்
என்ன விலை கொடுத்தாலும் வெற்றிபெற வேண்டுமென அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுவதால் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வரலாற்றிலேயே மிக மோசடி நிறைந்ததொன்றாக இருக்குமென ஜே.வி.பி. சாடியுள்ளது.
நீதி, நேர்மையை இத் தேர்தலில் எதிர்பார்க்க முடியாதெனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு தேசிய நூலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஜே.வி.பி.யின் ஊடகவியலாளர் மகாநாட்டில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்;
"கிழக்கில் 20 வருடங்களின் பின்னர் மாகாணசபை தேர்தல் இடம்பெறவுள்ளது. அம்மக்களுக்கு ஜனநாயகத்தை பெற்றுக்கொடுக்குமுகமாகவே படையினர் பிரபாகரன் பிடியிலிருந்து அதனை மீட்டனர். ஆனால், அரசாங்கம் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதைவிடுத்து அதற்கு விரோதமான செயலில் ஈடுபடுகின்றது.
அதாவது, கிழக்கு மக்கள் தமது அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுப்பதனை தடுப்பதற்கு அரசாங்கம் தேர்தல் அராஜக செயற்பாடுகளில் திருமலை மற்றும் அம்பாறையில் ஈடுபடுகின்ற நிலையில், மட்டக்களப்பில் அரச ஆசீர்வாதத்துடன் செயற்படும் ஆயுதக் குழுவினர் அதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமலை மாவட்டத்தில் எமது ஒன்பது தேர்தல் பிரசார அலுவலகங்கள் ஏப்ரல் மாதத்தில் தாக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் எவரும் பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை. அதுபோல், அர சாங்கம் அங்குள்ள அரச வளங்களை ஒன்றும்விடாமல் பயன்படுத்துகின்றது. நேற்று முன்தினம் கூட அரசுக்கு சொந்தமான வாகனத்தில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு தெருத்தெருவாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
இது இவ்வாறிருக்க, எமது கட்சியுட்பட போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாலை 5 மணிக்கு தேர்தல் பிரசாரங்களை நிறுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர். ஆனால், அரசாங்கத் தரப்பினர் இரவு 9, 10 மணி வரை தமது பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். இச் செயற்பாடுகள் எந்த வகையில் நியாயமானது. எமது உறுப்பினர்களும் தாக்குதலுக்கிலக்காகின்றதுடன், இதே நிலைமை தான் அம்பாறையிலும் காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயுதக் குழுக்கள் மக்களை ஆயுதங்களைக் காட்டி பயமுறுத்தி வாக்குகளை பெறுவதற்கான கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளதுடன் ஏனைய கட்சிகளின் பிரசார பதாகைகள் கிழித்தெறியப்பட்டு அவர்களது சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். அதுபோல் ஏனைய கட்சிகளின் பிரசாரங்களை தடுப்பதற்கான நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனர். இதற்கு அரசாங்கத்தின் ஆசீர்வாதம் உள்ளது.
ஜே.வி.பி. உட்பட தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேர்தல் நீதியாக இடம்பெற வேண்டுமாயின் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டுமென கோரியிருந்தன. ஆனால், ஆயுதங்கள் அவர்களின் பாதுகாப்புக்காகவேயிருக்கின்றதென்றும் யாரையும் கொல்வதற்கல்ல எனவும் அரசு கூறுகிறது.
அரசியலமைப்பு பேரவையூடான சுயாதீன குழுக்கள் அமைக்கப்பட்டிருக்குமாயின் தேர்தல் மோசடி இடம்பெற்றிருக்காது. அரசின் ஊழல் மோசடிகளும் தடுக்கப்பட்டிருக்கும். இதன் காரணமாகவே அரசு இப்பேரவையை நிறுவவில்லை.
நாட்டின் மற்றுமொரு விமான சேவை பாராளுமன்றத்துக்கு தெரியாமல் உருவாக்கப்பட்டது. முதல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் மாற்றப்பட்டது வரை எதுவுமே இப்பேரவை நிறுவப்பட்டால் நடந்திருக்காது. இவ்வாறு அரசாங்கம் கிழக்கில் மட்டுமல்லாது, முழு நாட்டிலும் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுகின்றது.
ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டதன் விளைவே பயங்கரவாதமாகும். ஐ.தே.க. ஆட்சிக்காலத்தில் வடக்கு மக்களின், தேர்தல் வாக்குகளை பறிப்பதற்காக சென்ற அமைச்சர்கள் யாழ். நூலகத்தை எரித்ததன் விளைவையே இப்போது அனுபவித்து வருகின்றோம்.
அரசாங்கம் தேர்தல் நீதியாவும் சுதந்திரமாகவும் நடைபெறுகின்றதாவென கண்காணிப்பதற்கு வெளிநாட்டு உள்நாட்டு அமைப்புகள் உள்ளதென தெரிவிக்கின்ற நிலையில், அக்குழுக்கள் மட்டுமல்ல, வேட்பாளர்கள் கூட சில இடங்களுக்கு செல்வது தடுக்கப்படுகின்றது.
இந்நிலையில், எவ்வாறு கிழக்கு தேர்தல் நீதியானதாகவும் சுதந்திரமானதாகவும் நடைபெறுமென எதிர்பார்க்க முடியும்" என்றார்.