பிரிட்டனில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் புலிகள் இயக்கத் தலைவர் கருணா அம்மான் விரைவில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படவுள்ளதாக பிரிட்டிஷ் அரச தரப்பு செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுபற்றி மேற்படி செய்தி வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வந்துள்ள தகவல்களுக்கேற்ப சிறைத்தண்டனை பெற்று அங்கு வாழ்ந்துவரும் கருணா அம்மான் இதுவரையில் சிறையில் ஒழுக்காற்று முறைப்பாடுகள் இல்லாது நன்னடத்தையுடன் சிறையில் காலத்தைக் கழித்து வருவதால் தண்டனைக் காலம், கருணா மீதான குற்றச் சாட்டு மற்றும் அறிவிக்கப்பட்டுள்ள தண்டனை சம்பந்தமாக கருணா தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டை சம்பந்தப்பட்ட பிரிட்டிஷ் நீதி அமைச்சுப் பிரிவு ஆராய்ந்து பார்த்த பின்னர் இவ்வாறு கருணாவை விரைவில் விடுவிப்பதற்காக நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்தத் தகவலை பிரிட்டிஷ் அரசு தரப்பின் நிதி அமைச்சுடன் சம்ந்தப்பட்ட தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருணா அம்மான் போலியான கடவுச் சீட்டைப் பயன்படுத்தி லண்டனுக்குப் பயணம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே சில மாதங்களுக்கு முன் பிரிட்டிஷ் நீதிமன்றம் அவருக்கு 9 மாத சிறைத்தண்டனையை விதித்திருந்தது. அந்தக் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்ட வேளையில் அவர் லண்டனிலுள்ள கென்சிங்ரன் பகுதியில் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் மூவருடன் தங்கியிருந்தார்.
தற்போது சிறையில் நன்னடத்தை அடிப்படையில் கருணாவுக்குரிய சிறைத் தண்டனையைக் குறைக்கும்படியான மேன்முறையீடு கருணா தரப்பில் பிரிட்டிஷ் நிதி அமைச்சின் குறித்த பிரிவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அது சாதகமாக நிதிப்பிரிவால் ஆலோசிக்கப்பட்டதாகவும் விரைவில் கருணா சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் பிரிட்டிஷ் தரப்பிலிருந்து வெளியாகியுள்ளன.
லங்காதீப : 04.05.2008