சொயிப் அக்தர் மீதான தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ஐ.பி.எல். போட்டியில் ஆடுகிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் கடிவாளமில்லாத குதிரை போல் செயல்படக்கூடியவர். பல சர்ச்சைகளில் சிக்கிய அக்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையை சாடினார். இதனால் ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளான அக்தர் 5 ஆண்டுகள் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தடை விதித்தது.
இந்தத் தடையை எதிர்த்து அக்தர், 3 பேர் கொண்ட நடுவர் மன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதனை விசாரித்த நடுவர் மன்றம் அக்தர் மீதான தடையை நீக்க மறுத்துவிட்டது. ஆனால் அக்தர் வெளிநாடுகளில் நடக்கும் போட்டியில் கலந்துகொண்டு ஆடலாம் என்று அறிவித்தது.
ஆனால் தடை நீக்கப்படாத பட்சத்தில் ஐ.பி.எல். போட்டியில் அக்தர் பங்கேற்க முடியாதென்று ஐ.பி.எல். போட்டி நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இதை தொடர்ந்து அக்தர் மீண்டும் நடுவர் மன்றத்தில் முறைப்பாடு செய்தார். அதில் ஐ.பி.எல். போட்டியில், தான் ஆட வசதியாக தன் மீதான தடையை நீக்க வேண்டுமென்று கோரியிருந்தார். நடுவர் மன்ற தலைவர் அப்தாப் பரூக் விசாரணை நடத்தினார்.
அக்தர் மேல் முறையீடு மனு மீது ஜூன் 4 ஆம் திகதி விசாரணை தொடங்கி நடைபெறுகிறது. அந்த விசாரணை தொடங்கும் வரை அக்தர் மீதான தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக நடுவர் மன்றம் அறிவித்துள்ளது. இதனால் அக்தர் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியும்.
`அக்தர் மீதான வழக்கு விசாரணை முடியக் காலம் பிடிக்கும். அதற்குள் ஐ.பி.எல். போட்டியில் விளையாட விடாமல் தடுப்பது கூடுதல் அபராதம் என்று கருதுவதால் அவர் மீதான தடை இடைநிறுத்தப்படுவதாக நடுவர் மன்ற தலைவர் அப்தாப் பரூக் தெரிவித்தார்.
தடை நீக்கம் குறித்து அக்தர் கருத்து தெரிவிக்கையில்,
"இது எனக்கு மிகப்பெரிய நிம்மதியாகும். என் மீதான தடை முழுமையாக நீங்கி, நாட்டுக்காக மீண்டும் விளையாட வேண்டுமென்பது தான் எனது முக்கிய நோக்கமாகும். ஐ.பி.எல். போட்டியில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்" என்றார்.
ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி அக்தர் மீதான தடை நீக்கத்தை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், `அக்தர் மீதான தடை நீக்கப்பட வேண்டும் அல்லது இடைநிறுத்தப்பட வேண்டும். அப்போது தான் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியும் என்பது எங்கள் நிபந்தனை. தடை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அக்தர் போட்டியில் விளையாட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவருடன் நாங்கள் பேசினோம். இன்னும் 2 நாட்களில் அவர் இந்தியா வருவார்' என்று தெரிவித்தார்.
அக்தர் 1.70 கோடி ரூபாவுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் வருகையால் அந்த அணி நிர்வாகம் மகிழ்ச்சியடைந்துள்ளது.