கப்டன் பொலக் சகல துறைகளிலும் ஜொலிக்க, மும்பை இந்தியன்ஸ் அணி, சேவாக்கின் டில்லி டேர்டெவில்ஸ் அணியை 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் சச்சின், ஹர்பஜன் இல்லாமல் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
நேற்று முன்தினம் மும்பையில் நடந்த லீக் போட்டியில் சேவாக் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி, பொலக்கைக் கப்டனாக கொண்ட மும்பை இந்தியன்ஸ், அணியுடன் மோதியது. நாணயச் சுழற்சியில் வென்ற சேவாக் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெயசூரியா, டகாவாலே அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர். முதல் ஐந்து போட்டிகளில் சோபிக்கத் தவறிய ஜெயசூரியா அதிரடி காட்டினார். ஆசிப் வீசிய இரண்டாவது ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரிகளை விளாசினார். தொடக்கத்தில் மந்தமாக விளையாடிய டகாவாலே, மெக்ராத் பந்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடித்து அசத்தினார்.
இதையடுத்து, சேவக் பந்துவீச்சில் மாற்றம் கொண்டு வந்தார். ஆசிப்புக்கு பதிலாக யோமகேஷ் பந்துவீசினார். இவரது முதல் பந்தில் ஜெயசூரியா சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் பவுண்டரிக்கு ஆசைப்பட்ட டகாவாலே (14), சங்வானிடம் பிடி கொடுத்து வெளியேறினார். ஐந்தாவது பந்தில் ஜெயசூரியா மீண்டும் ஒரு பவுண்டரி அடித்து, ரசிகர்களுக்கு அதிரடி விருந்தளித்தார். ஆனால், மனம் தளராத யோமகேஷ் கடைசி பந்தில் ஜெயசூரியாவை `கிளீன் போல்ட்'டாக்கினார். இவர் ஒரு சிக்சர், 6 பவுண்டரி உட்பட 16 பந்தில் 34 ஓட்டங்கள் எடுத்தார்.
அடுத்து வந்த உத்தப்பா, தார்ன்லியுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய உத்தப்பா, பாட்டியா பந்துவீச்சில் வரிசையாக இரண்டு சிக்சர் அடித்தார். சங்கவான் வீசிய அடுத்த ஓவரில் தார்ன்லியும் சிக்சர் விளாச ஓட்ட எண்ணிக்கை ரொக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 52 ஓட்டங்கள் எடுத்த நிலையில் 2 சிக்சர் அடித்த உத்தப்பா 22 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். தார்ன்லி 2 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் எடுத்து, பெவிலியன் திரும்பினார்.
இவர்களைத் தொடர்ந்து அபிஷேக் (2), பிராவோ (2) என ஓவருக்கு ஒரு விக்கெட் விழ மும்பை திணறத் தொடங்கியது. கப்டனுக்குரிய பொறுப்புடன் விளையாடிய பொலக் கடைசிக் கட்டத்தில் டில்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். ஆசிப் வீசிய 19 ஆவது ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்சர் விளாசி, அசத்தினார். இவர் 15 பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து, களமிறங்கிய டில்லி அணிக்கு காம்பிர் ஏமாற்றமளித்தார். மிகவும் மந்தமாக விளையாடிய இவர் 9 பந்தில் ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்தார். தவான் (1), பொலக் பந்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த டிவிலியர்ஸ் ஒரு சிக்சர், 2 பவுண்டரி உட்பட 21 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன்- அவுட்டானார்.
இந்நிலையில், களமிறங்கிய சொய்ப் மாலிக், சேவாக்குடன் ஜோடி சேர்ந்தார். மும்பை பந்துவீச்சை இந்த ஜோடி எளிதாக சமாளிக்க, பொலக், ஜெயசூரியாவிடம் பந்தை கொடுத்தார். முதல் பந்தில் சிக்சர் அடித்து சேவாக், ஜெயசூரியாவுக்கு எதிர்பாராத வரவேற்பளித்தார். அதே ஓவரில் கடைசிப் பந்தில் மீண்டும் ஒரு சிக்சர் அடித்து மும்பை வீரர்களை வெறுப்பேற்றினார். சேவாக் 3 சிக்சர், 3 பவுண்டரியின் உதவியுடன் 20 பந்தில் 40 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க ஆட்டம் மெல்ல மெல்ல மும்பை இந்தியன்ஸ் பக்கம் சாயத் தொடங்கியது.
இவரை தொடர்ந்து சொய்ப் மாலிக்கும் (24) வெளியேறினார். தினேஷ் கார்த்திக் 28 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து வந்த பின்வரிசை வீரர்கள் விரைவில் வெளியேறினர். டில்லி டேர்டெவில்ஸ் அணி 24 ஓட்டங்களுக்கு கடைசி 6 விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியில் 18.5 ஓவரில் 133 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்டநாயகன் விருதை பொலக் தட்டிச் சென்றார்.