தோனியின் சென்னை சுப்ப கிங்ஸ் அணி மீண்டும் சொதப்பியது. நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் போட்டியில் ஷேன்வோர்ன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியைச் சந்தித்தது. 6 விக்கெட்டுகளை வீழ்த்திய சொகைல் தன்வீர் ஒட்டுமொத்த சென்னை அணிக்கு வேட்டு வைத்தார். தொடர்ந்து 5 ஆவது வெற்றியை பெற்ற வோர்ன் அணி, தொடரில் முதலிடத்துக்கு முன்னேறியது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) `ருவென்ரி - 20' தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடந்த லீக் போட்டியில் சென்னை சுப்ப கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற தோனி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
சென்னை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி கொடுத்தார் சொகைல் தன்வீர். வேகத்தில் மிரட்டிய இவர் முதல் பந்தில் பார்த்திவ் பட்டேலை `டக்' அவுட்டாக்கினார். 5 ஆவது பந்தில் பிளமிங்கை (0) வெளியேற்றினார். பந்தை அருமையாக `ஸ்விங்' செய்த இவர் 3 ஆவது ஓவரில் வித்யூத்தை (5) பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அடுத்து வந்த பத்ரிநாத் (15) இரண்டு பவுண்டரி அடித்த கையோடு வாட்சன் பந்தில் நடையைக் கட்டினார்.
அணியை காப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கப்டன் தோனி (1), வோர்ன் சுழலில் சிக்கினார். 6 கோடி ரூபாவுக்கு வாங்கப்பட்ட இவர் ஏமாற்ற, சென்னை அணி 7.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 44 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்தது. இதற்கு பின் ரெய்னா, மோர்கல் இணைந்து போராடினர். வோர்ன் வீசிய 12 ஆவது ஓவரில் மோர்கல் இரண்டு பவுண்டரி, 1 சிக்சர் உட்பட 17 ஓட்டங்கள் எடுத்தார். 6 ஆவது விக்கெட்டுக்கு 44 ஓட்டங்கள் எடுத்த ரெய்னா (27), முனாப் பந்தில் வெளியேறினார்.
இந்த நேரத்தில் மீண்டும் பந்து வீச வந்த தன் வீர் கலக்கினார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த மோர்கலை வெளியேற்றி திருப்பு முனை ஏற்படுத்தினார். மோர்கல் 42 ஓட்டங்களுள் ( ஒரு சிக்சர், 4 பவுண்டரி) எடுத்தார். இவரது வேகத்தில் முரளிதரன் (0), நிற்னியும் (11) சிக்கினர். சென்னை சுப்ப கிங்ஸ் அணி 19 ஓவரில் 109 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இலகுவான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு ஸ்மித், அஸ்னோட்கர் அசத்தல் தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 78 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அஸ்னோட்கர் (32) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யூசுப் பதான் 8 ஓட்டங்களுக்கு முரளிதரன் சுழலில் வெளியேறினார். பின்னர் ஸ்மித் (35), வாட்சன் (14) இணைந்து விரைவாக வெற்றியை உறுதி செய்தனர்.
வித்யூத் வீசிய 13 ஆவது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார் வாட்சன். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 14.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தானைச் சேர்ந்த 23 வயதான சொகைல் தன்வீர் கையை வளைத்து மிகவும் வித்தியாசமாக பந்து வீசுவார். ராஜஸ்தான் அணியின் வெற்றி நாயகனாக ஜொலித்த இவர் 4 ஓவரில் 14 ஓட்டங்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தும் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். தவிர `ருவென்ரி-20' வரலாற்றில் மிகச் சிறந்த பந்து வீச்சையும் பதிவு செய்தார்.
ஸ்மித் `கேட்ச்' தொடர்பாக கங்குலியை விமர்சித்த கப்டன் வோர்னுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சர்ச்சையை கடந்து தனது அணிக்கு இன்னொரு மகத்தான வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.
ஹைடன், ஹசி இல்லாத நிலையில் கப்டன் தோனியால் சாதிக்க முடியவில்லை. தொடர்ந்து இரண்டாவது முறையாக சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளது.