Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
உணவு விலை உயர்வும் புஷ்ஷின் வியாக்கியானமும்
[07 - May - 2008] [Font Size - A - A - A]
உலகில் இன்று உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதற்கு இந்தியர்களும் பொறுப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூபுஷ் கடந்தவாரம் தெரிவித்த கருத்து இந்தியாவில் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கிறது. இந்திய இடதுசாரிக் கட்சிகளே புஷ்ஷை இதற்காகக் கண்டனம் செய்வதில் முந்திக் கொண்டன. பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி அமெரிக்க ஜனாதிபதியின் கருத்தை கொடூரமான ஒரு ஜோக் என்று வர்ணித்திருக்கிறார். அத்துடன் அவர் உலகில் இன்று ஏற்பட்டிருக்கும் தானிய வகைகளின் தட்டுப்பாட்டுக்கு அமெரிக்கக் கொள்கைகளும் காரணம் என்றும் அமெரிக்காவில் தாவர எரிபொருள் உற்பத்திக்கு அளிக்கப்படும் அரசாங்க ஊக்குவிப்பே உணவுத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இந்திய வர்த்தக இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அமெரிக்க ஜனாதிபதி நிரம்பிய பொருளாதார அறிவைக் கொண்டவர் என்று ஒருபோதுமே அறியப்பட்டவரல்ல என்று குறிப்பிட்டிருக்கிறார். இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி புஷ்ஷின் கருத்து தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்த வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு இந்தியர்கள் மீது பழியை போடும் புஷ்ஷின் கருத்துக்கு பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் தகுந்த பதில் அளிக்க வேண்டுமென்று அரசியல் கட்சிகள் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றன.

உண்மையிலேயே, உலக உணவு விலை உயர்வுடன் இந்தியர்களைத் தொடர்புபடுத்தும் வகையிலான கருத்தை முதலில் வெளியிட்டவர் புஷ் அல்ல. அவரின் வெளியுறவு அமைச்சர் கொண்டோலீசா றைஸ்தான். றைஸின் கருத்துத் தொடர்பில் இந்திய அரசியல் வாதிகள் பெரிதாக சர்ச்சையைக் கிளப்பாதது ஏனோ தெரியவில்லை. இந்தியாவிலும் சீனாவிலும் உள்ள மக்களின் உணவுப் பழக்கங்களில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற முன்னேற்றமும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மீது அந்த நாடுகள் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளும் உலகளாவிய இன்றைய உணவு நெருக்கடிக்கான காரணிகளில் அடங்குகின்றன என்று கொண்டோலீசா றைஸ் கூறியிருந்தார். அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்த சில நாட்களில் ஜனாதிபதி புஷ்ஷும் உலக உணவு நெருக்கத்துக்கு இந்தியர்களும் காரணம் என்று கூறியிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை மிசோரியில் இடம்பெற்ற மகாநாடொன்றில் உரையாற்றிய புஷ்ஷிடம் உணவு விலை அதிகரிப்பு குறித்து கேள்வி கிளப்பப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த அவர், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் ஏற்பட்டுவரும் சுபிட்சத்தின் விளைவாக உலகில் உணவுப் பொருட்களுக்கு கிராக்கி அதிகரித்து வருகிறது என்றும் இது ஒரு நல்ல விடயம் ஏனென்றால், பெரிய நாடுகளுக்கு அமெரிக்கா அதன் உற்பத்திகளை விற்பனை செய்யக்கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். சுபிட்சமடையாத நாடுகளுக்கு அமெரிக்க உற்பத்திகளை விற்பனை செய்வது பெரும் சிரமம். மறுவார்த்தைகளில் சொல்வதானால் உலகம் எந்தளவுக்கு கூடுதல் சுபிட்சமாக இருக்கிறதோ அந்தளவுக்கு அமெரிக்காவுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று கூறிய புஷ், `இந்தியாவில் 35 கோடி மக்கள் நடுத்தரவர்க்கத்தினர் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் முழு சனத்தொகையையும் விட இந்திய நடுத்தரவர்க்கத்தினரின் தொகை பெரியது. வாழ்க்கை வசதிகள் அதிகரிக்கும் போது அவர்கள் சிறந்த போசாக்குடைய உணவு வகைகளைக் கூடுதலாக நாடுகிறார்கள். இதன் விளைவாக உணவுப் பொருட்களுக்கான கிராக்கி அதிகரிக்கிறது. அதன் காரணத்தினால் உணவு விலை உயர்கிறது' என்றும் விளக்கமளித்தார்.

இந்திய நடுத்தரவர்க்கத்தினர் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சுபிட்சம் உலகளாவிய ரீதியில் உணவுத்தானியங்களின் விலையுயர்வுக்கு ஒரு காரணம் என்பதே புஷ்ஷின் வாதமாகும். இது தொடர்பில் சர்ச்சை கிளப்புபவர்கள் அந்த நடுத்தரவர்க்கத்தினரின் தொகை 35 கோடி என்ற அவரின் கணிப்பீடு குறித்து எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லை. 110 கோடி சனத்தொகை கொண்ட இந்தியாவில் அமெரிக்க ஜனாதிபதியே பொறாமைப்படுகின்ற அளவுக்கு போசாக்குடைய தரமான உணவுவகைகளை அன்றாடம் உட்கொள்கின்ற நடுத்தரவர்க்கத்தினரின் உண்மையான சனத்தொகை என்ன? இந்திய ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் வந்திருக்கும் அபிப்பிராயம் தெரிவித்திருக்கும் சிலர் புஷ்ஷின் கருத்தை இந்தியாவின் அபாரபொருளாதார வளர்ச்சிக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமாகக் கூட கருதும் விசித்திரத்தைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் விவசாயக் கொள்கைகள் இன்றைய உலக உணவு நெருக்கடிக்கு செய்திருக்கும் பங்களிப்பை மறைக்கும் ஒரு தந்திரோபாயமாகவே புஷ் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் நடுத்தரவர்க்கத்தின் மீது பழியை போடுகின்றார் என்பதில் சந்தேகமில்லை.

அண்மைக்காலமாக சோளத்தில் இருந்து சாராயத்தை உற்பத்தி செய்து அதைப் பெற்றோலுடன் கலந்து எரிபொருளாக்குகின்ற தொழில்நுட்பம் துரிதமாக வளர்ச்சிகாணத் தொடங்கியிருக்கின்றது. இதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்காவும் மேற்குலகின் பிரதான நாடுகளும் செயற்படுகின்றன. உலகில் உணவுப் பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு இது ஒரு பிரதான காரணமாக இருக்கின்றது. இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த விடயத்தை அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் சுட்டிக்காட்டி அமெரிக்காவைக் கண்டனம் செய்தார் என்பது கவனிக்கத்தக்கது. இன்றைய உலக உணவுவிலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்ற போதிலும், மனிதர்களுடைய உணவுத் தேவையைக் கணக்கில் எடுக்காமல் இலாப நோக்கில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப் படுவதாலேயே உணவுப் பற்றாக்குறை தோன்றியிருக்கின்றது என்ற அடிப்படை உண்மையை எவராலும் மூடி மறைக்க முடியாது. உலகமயமாக்கலுடன் சேர்ந்து விருத்தி பெற்று வருகின்ற ஆரோக்கியமற்ற நுகர்வுப் பண்பாடு பலவழிகளில் உலகில் உணவுத் தானியத் தட்டுப்பாட்டுக்கு காரணமாக இருந்துவருகின்றது என்ற உண்மையை உணராத பட்சத்தில் உணவு நெருக்கடியில் இருந்து மீள்வது கஷ்டமாக இருக்கும்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com