* கப்பல் சின்ன சுயேச்சை வேட்பாளர்
எம்.எம்.எம்.நூறுல் ஹக்
"முதலமைச்சரைப் பெறுவதோ, கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை கைப்பற்றுவதோ நமது நோக்கமில்லை என்று ஷ்ரீல.முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தேர்தல் பிரசார மேடைகளில் கூறிவருவதில் எந்தவிதமான உண்மைகளுமில்லை" என சுயேட்சை வேட்பாளரும் ஊடகவியலாளருமான எம்.எம்.எம்.நூறுல் ஹக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் கப்பல் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சைக் குழுவின் பிரசாரக் கருத்தரங்கு அண்மையில் சம்மாந்துறையில் ஏ.எம்.முஜீத் தலைமையில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றும் போது;
எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பதுதான் ஷ்ரீல.மு.காங்கிரஸின் உண்மையான நோக்கமானால் தனித்து மூன்று மாவட்டங்களிலும் தனது மரச் சின்னத்தில் போட்டியிட்டு அது தனித்துவம் காத்திருக்க முடியும். அதனைத் தவிர்ந்து விட்டு யானைச் சின்னத்தில் போட்டியிடுவதன் நோக்கம், ஐ.தே.க ஆதரவாளர்களான சிங்கள மக்களினதும் தமிழ் மக்களினதும் வாக்குகளோடு தமது ஆதரவாளர்களின் வாக்குகளையும் பெற்று ஆட்சி அமைத்து முதலமைச்சர் பதவியை தமதாக்கிக் கொள்ளலாம் என்ற நப்பாசையில் தான் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது என்பது இரகசியமானதல்ல.
இதனை மறைத்துவிட்டு வெளிப்படையில் வேறு காரணங்களை அவர்கள் முன்வைப்பதில் எவ்விதமான உண்மைகளுமில்லை. அவர்கள் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவுவது உறுதியாகிவிட்டது. ஐ.ம.சு.முன்னணி, சுயேச்சைக் குழுக்கள் என நமது மக்கள் பிரிந்து நின்று வாக்களித்தமை, இத்தேர்தலை அரசாங்கம் மோசடியாக நடத்தியமை தமது தோல்விக்குக் காரணமென பழியை போட்டுவிட்டு தப்பித்துக் கொள்வார்கள்.
ஐ.ம.சு.முன்னணியுடன் த.ம.வி. புலிகள் இணைந்து போட்டியிடுவது என்ற தீர்மானம் மாகாண சபைத் தேர்தல் வேட்பு மனுத் தாக்கலுக்கு முன்னரே உறுதியாகத் தெரிந்தது.
இதனைப் புறக்கணித்துவிட்டு, எந்தவிதமான உத்தரவாதங்களுமில்லாத - எதிர்காலக் கனவாக நம்பப்படும் தென் கிழக்கலகு பற்றி இன்று பேசத் தொடங்கி இருக்கின்றனர். ஆகக்குறைந்தது கரையோர மாவட்ட சிந்தனை ஐ.தே.கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே பேசப்பட்டதாகும். அதனைக் கூட தர மறுத்துவிட்ட ஐ.தே.கட்சியினருடன் இன்று கூட்டணி அமைத்துக் கொண்டு நமது உரிமை எனக் கூறிக் கொண்டிருப்பது சிந்திக்க வேண்டியதாகும்.
தென் கிழக்கு அலகு யோசனையை முற்றாக நிராகரித்தும் முஸ்லிம் தனித்தரப்பு தராததும், முஸ்லிம் அலகு பற்றி பேசும் தருணம் இதுவல்ல என்றும் நமது மக்களை ஏமாற்றிவிட்டு இப்போது சுயம், தனித்துவம் என்ற மாயைத் தோற்றத்தை ஏற்படுத்தி வாக்கு சுவீகரிப்பை மேற்கொள்கின்றனர் என்பதே இன்றைய யதார்த்தமாகும்.
இந்த மாயைக்குள் நமது மக்கள் அகப்பட்டுச் சென்றால் எதிர்காலத்தில் பல்வேறு நெருக்கடிகளை அனுபவிக்கின்ற சமூகமாக மாறும் அபாயம் ஏற்படும். ஏனெனில், ஐ.தே.கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் என்பன முஸ்லிம்களின் சுயத்திற்கு அங்கீகாரம் தரப் போவதில்லை. அதேநேரம் முஸ்லிம் முதலமைச்சர் வருவதற்கு உதவப் போவதுமில்லை. இந்நிலையில், நமது எழுச்சிகளை தடை செய்வதற்கு மேற்சொன்ன அமைப்புகளே முன்னிற்கும்.
சொந்த விருப்பு வெறுப்புக்கு உட்பட்டு அரசியல் செய்ய முனையும் போது நமது சமூகத்தைமையமாகக் கொண்டதும், சமூக மேம்பாட்டிற்கு அனுகூலமானதுமான வழிகளை கடைப்பிடிக்க வழிகாட்ட முடியாது போய் விடுவது தவிர்க்க இயலாத பண்பாகிவிடும்எனத் தெரிவித்தார்.